×

தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை மரங்களின் பராமரிப்பு செலவு கூட கிடைப்பதில்லை

ராமநாதபுரம், மே 22: தென்னை மரங்களை நெட்டை, குட்டை என 2 வகையாக ரகம் பிரித்து பயிரிடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மூன்றாவது ரகமாக கலப்பு தென்னை மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். மண் வளம், நீர், வெப்ப நிலையை பொறுத்து விளைச்சல் மாறுபடும். நெட்டை மரம் நடவு செய்து 6 வருடங்கள் முதல் 80-100 வருடம் வரை பயன் தரக்கூடியது.

தரமான மரத்தில் 100 முதல் 150 காய் பறிக்கலாம். குட்டை ரகம் 3 முதல் 4 ஆண்டுகளில் பலன் தரகூடியது. கலப்பின மரங்களில் நெட்டை தாய், குட்டை தாய் என சேர்த்து அதிகமான காய்கள் பறிக்கலாம். நல்ல வாளிப்பான காய்க்கும் 25 ஆண்டு கால தென்னை மரத்திலிருந்து நெற்றை எடுத்து நாமே பருவகால மழைக்கும் முன்பு நாற்று விட்டால் வளர்ந்து விடும் என்கின்றனர்.

வானம் பார்த்த பூமியாக உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் 10ஆயிரம் ஹெக்டேரில் இருந்த தென்னை விவசாயம் தேங்காய்க்கு போதிய விலையில்லாத நிலையில் 8ஆயிரம் ஹெக்டராக குறைந்துவிட்டது. பல தோப்புகள் பராமரிக்க முடியாமல் வீட்டு மனைகளாக மாறி விட்டன. அன்றாட உணவிற்கு தேங்காய் அத்தியாவசிய உணவுப்பொருளாக உள்ளது. மாவட்டத்தில் கிழக்கு பகுதியான உச்சிப்புளி, ஆற்றாங்கரை, கீழக்கரை, மண்டபம் பகுதிகளில் ஏராளமான தென்னை விவசாயிகள் உள்ளன.

தென்னைமர தோப்புகளில் தண்ணீர் இல்லாமல் மரங்கள் காய்ந்து போய் உள்ளது. பாரம்பரியமாக தென்னை மரங்களை வளர்த்து வந்த விவசாயிகளே உள்ளனர். புதிய விவசாயிகள் யாரும் தென்னை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. உரம், தோப்பு பராமரிப்பு வேலையாட்கள் கூலி என விளைச்சல் செலவிற்கேற்ற விலையில்லை. தென்னை வளர்க்கும் விவசாயிகளுக்கு அரசின் ஆதரவில்லை என விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். நாளுக்கு நாள் அழிந்தவரும் விவசாயமாக தென்னை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

தென்னை விவசாயி செல்லதுறை அப்துல்லா கூறுகையில், தென்னை விவசாயம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தென்னை மரங்கள் பலன் தர பல ஆண்டுகளாகின்ற நிலையில் பராமரிப்பு செலவு அதிகரித்து கொண்டே உள்ளது. தென்னை விவசாயிகளுக்கு அரசின் உதவி இல்லை. தேங்காய் சில்லரை விலை கூடினாலும் மொத்த விலை உயரவில்லை.

ஒரு காய் 15 முதல் 30 வரைதான் விலை போகிறது. தென்னை மர தோப்பு வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் குறைந்து கொண்டே உள்ளனர். தென்னை மரங்கள் விவசாயம் செய்ய புதியவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. நகர்புறத்தை ஒட்டியுள்ள பல தோப்புகள் வீட்டு மனைகளாக மாறி விட்டன என்றார்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா