×

நாகை எம்பி, திருவாரூர் எம்எல்ஏ தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது 521 போலீசார் பாதுகாப்பு பணி

திருவாரூர், மே 22: நாகை எம்பி தொகுதி மற்றும் திருவாரூர் எம்எல்ஏ தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 521 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக தேர்தல் அலுவலர்   ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நாகை எம்.பி  தொகுதியில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் நன்னிலம் எம்எல்ஏ தொகுதிகள் இருந்து வருகின்றன. இதில் மொத்தம் 13 லட்சத்து 3 ஆயிரத்து 60 வாக்காளர்கள் உள்ள நிலையில் இவர்களுக்காக மொத்தம் ஆயிரத்து 537 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இதனையடுத்து இந்த தொகுதியில் மொத்தம் 9 லட்சத்து 95 ஆயிரத்து 947 வாக்குகள் பதிவான நிலையில் அதன்   மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உரிய போலீஸ் பாதுகாப்புடன்  வாக்கு சாவடி மையங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில்  இயங்கி வரும் திரு.வி.க அரசு கலைக்கல்லூரி கட்டிடத்தில் எம்.எல்.ஏ தொகுதிகள் வாரியாக தனிதனி அறைகளில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டு    தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் சி.பி.நேமா மற்றும் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் திருவாரூர் எம்எல்ஏ தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி மொத்தம் 303 வாக்குசாவடி மையங்களில் நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 609 வாக்குகள் பதிவான நிலையில் அதன்  வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களும் இதே கல்லூரி கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டு தனி அறையில்  வைக்கப்பட்டு  தொகுதியின் பொது தேர்தல் பார்வையாளர் சந்திரகாந்த்டாங்கே மற்றும் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் முன்னிலையில் பூட்டி சீல் வைத்ததுடன் இந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு மாவட்ட எஸ்பி துரை தலைமையில் 214 போலீசாரை கொண்டு 24 மணி நேரமும்  3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளை ( 23ம் தேதி)  நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் அலுவலர் ஆனந்த், தேர்தல் பொது பார்வையாளர் சி.பி.நேமா மற்றும் எஸ்.பி துரை ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் வாக்கு எண்ணிக்கை குறித்து தேர்தல் அலுவலர் ஆனந்த் கூறியதாவது,

நாளை காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ள நிலையில் இந்த பணியில்  ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும் காலை 6 மணிக்குள்ளாகவே மையத்திற்குள்  இருக்க வேண்டும். மேலும்  ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேஜைக்கும் தலா ஒரு வாக்கு எண்ணும் அலுவலர், உதவி அலுவலர் மற்றும் நுண்பார்வையாளர் என மொத்தம் 17 மேஜைகளுக்கும் 51 அலுவலர்கள் வீதம் 306 அலுவலர்கள் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ தொகுதியின் இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக 51 அலுவலர்கள் என மொத்தம் 357 அலுவலர்களும், இதர பணிகளுக்காக 372 அலுவலர்களும் என மொத்தம் 729 அலுவலர்கள் பணிகளில் ஈடுபடுகின்ற நிலையில் இந்த வாக்கு எண்ணும் மையத்திற்குள் அலுவலர்கள் யாரும் செல்போன் எடுத்து வர அனுமதி இல்லை. மேலும் இந்த வாக்கு எண்ணிக்கையையொட்டி எஸ்.பி துரை தலைமையில் ஒரு  கூடுதல் எஸ்.பி, 4 டி.எஸ்.பி, 15 இன்ஸ்பெக்டர், 39 எஸ்.ஐ, 221 எஸ்.எஸ்.ஐ, 20 போக்குவரத்து இன்ஸ்பெக்டர், 86 ஆயுதபடை போலீசார், 65  சிறப்பு காவல் படை போலீசார், 24 துணை ராணுவத்தினர் மற்றும் 46 ஊர் காவல் படையினர் என மொத்தம் 521 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு தேர்தல் அலுவலர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Nagai MP ,police protection work ,constituency ,Thiruvarur MLA ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக...