×

லெட்சுமாங்குடியில் காம்பவுண்ட் சுவர் இல்லாததால் குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் பள்ளி வளாகம்

கூத்தாநல்லூர், மே 22: கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடியில் உள்ள அரசுப்பள்ளி குடிமகன்களின் கூடாரமாக மாறி வருவதற்கு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரும், கல்வித்துறையும் உடனடியாக தலையிட்டு பள்ளி வளாகத்தில் அத்துமீறும் சமூக விரோதிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தாநல்லூர் அருகே உள்ளது லெட்சுமாங்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. மன்னார்குடி ஒன்றியத்தை சேர்ந்த இந்த பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வெறும் எட்டு மாணவர்கள் மட்டுமே படித்து வந்த இந்த துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவியாசிரியரின் அயராத உழைப்பினாலும், கல்வி கற்பிக்கும் முறைகளினாலும் இன்று 40 மாணவ மாணவிகள் வரை எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளியைச்சுற்றி  காம்பவுன்ட் சுவர் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மாலை நேரங்களில் சிலர் இந்த பள்ளி வகுப்பறைகளுக்கு முன்னால் அமர்ந்து மது அருந்தி வருகின்றனர். அருகருகே குடியிருப்பு பகுதிகள் உள்ள இந்த பள்ளியில் அமர்ந்து, மது குடிப்பவர்களின் செயலால் பலர் மாலை நேரங்களில் வீட்டை விட்டே வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் அருகாமையில் உள்ளவர்களிடம் கேட்டபோது, பள்ளியில் மது அருந்துபவர்கள் மதுபாட்டிலையும் கப் மற்றும் சிகரெட் துண்டுகளையும் பள்ளி வகுப்பறைகளின் எதிரிலேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். ஊரின் ஒதுக்குப்புறமாக பள்ளி இருப்பதால் குடிப்பவர்களுக்கு இந்த இடம் வசதியாக உள்ளது. இந்த பள்ளியைச்சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததே இப்படி மது குடிப்பவர்கள் இங்கு பள்ளிக்கு உட்புறம் வர ஏதுவாக அமைந்துள்ளது. அரசும் பொது நல அமைப்புக்களும் முன்வந்து இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பது ஒன்றே இந்த சமூகவிரோத செயலை தடுக்கும் ஒரே வழி ஆகும் என்று குறிப்பிட்டனர். கல்வியை போதித்து எதிர்கால இந்தியாவை காக்கும் இளைஞர்களை உருவாக்கும் இந்த துவக்கப்பள்ளி, மதுகுடித்து போதையில் திரியும் சமூகவிரோதிகளை உருவாக்கும் இடமாக மாறிவிடாமல் காவல்துறையும், கல்வித்துறையும் உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  பரந்தமனம் உள்ளவர்கள் இந்த பள்ளியைச்சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டித்தர முன்வர வேண்டும் எனவும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் விரும்புகின்றனர்.

Tags : school campus ,civilians ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை