×

நகரங்களில் உள்ளது போல அனைத்து கிராமங்களிலும் இணையதள வசதி வேண்டும்

ராமநாதபுரம், மே 22: ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 சிறப்புநிலை நகராட்சி, 5 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் 429 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் இண்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்றைய காலக்கட்டத்தில் இணைய தளம் என்பது அத்தியாவசியமாகி விட்டது. படிப்பு, பொது அறிவு என அனைத்தையும் இணையதளத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையுள்ளது. இணையதள இணைப்பு உள்ள கம்ப்யூட்டரில் தேவையான தகவல்களை பெற்று தெரிந்துகொள்ள முடியும். நகரங்களில் உள்ளது போல கிராமங்களிலும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இன்று வரை இணையதள வசதி என்பது எட்டாக் கனியாக உள்ளது.

10ம் வகுப்பு முதலே இணையதளத்தில் புத்தகம் முக்கிய வினாக்கள், பொது குறிப்புகள், படிப்பில் சந்தேகம் உள்ள கணக்கிற்கான விளக்கங்கள், அறிவியல் பாடங்கள் தொடர்பான செயல்முறை மற்றும் நாட்டு நடப்புகள் உலக நிகழ்வுகள், பொது அறிவு குறித்து தெரிந்து கொள்ள இண்டர்நெட் இணைப்பு வேண்டும். இதற்கான வசதிகள் கிராமங்களில் இல்லாத நிலையில் படிப்பு சம்பந்தமாக இணையதளத்தில் தேடி தெரிந்து கொள்ள மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக பஞ்சாயத்து அலுவலகங்களில் ஒரு கம்ப்யூட்டரில் இணையதள வசதி ஏற்படுத்தி கொடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாணவர்கள் கூறுகையில், ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் இணையதள வசதி ஏற்படுத்தி தந்தால் படிப்பு தேவைக்கான தேவையான தகவல்களை பதிவிறக்கம் செய்து புதிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இதே போல போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு இணையதள வசதி கட்டாயம் வேண்டும்.

கிராமங்களில் இணையதள வசதியிருந்தால் இங்கிருந்து நகர் பகுதிக்கு உள்ள பிரவுசிங் சென்டர்களை தேடிச் செல்ல வேண்டியதில்லை. தினந்தோறும் உலகத்தில் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு நடந்து வருகின்ற நிலையில் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் கிராமங்கள் தோறும் கண்டிப்பாக இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும். பஞ்சாயத்து அலுவலகத்தில் இணையதள வசதி ஏற்படுத்தி கொடுத்தால் ஊராட்சி செயலர் அதனை கண்காணித்து வருவார்கள். 10ம் வகுப்பு படிக்கும் போதே போட்டி தேர்வுக்கு தயாராகின்ற போட்டி உலகமாக மாறி வருகிறது.

அதற்கேற்ற வகையில் மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள அடிப்படை வசதிகளை அரசு செய்த தரவேண்டும். எல்லாவற்றுக்கும் பெற்றோரை எதிர்பார்த்தால் படிக்கவே வேண்டாம் என சொல்லி விடுவார்கள். கிராமங்களிலே இணையதள வசதியிருந்தால் அதிகமான மாணவிகளும் படிப்பதற்காகன வாய்ப்புகள் உண்டாகும்  என்றனர்.

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் என மத்திய மாநில அரசுகள் கூறி வரும் நிலையில் கிராமங்களில் உள்ள மாணவ,மாணவிகள் படிப்பதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தி தருவது கட்டாயமாகும். வரும் கல்வியாண்டிலேயே அரசு செய்து தர வேண்டும் என்பதே கிராமப்புற மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : villages ,towns ,
× RELATED திருப்பத்தூரில் 14 கிராமங்கள் தேர்தல் புறக்கணிப்பு