×

நஞ்சில்லா உணவு உற்பத்தியை பெருக்க மண்புழு உர கம்போஸ்ட் தயாரிக்கும் வழிமுறை வேளாண் அதிகாரி விளக்கம்

திருவையாறு, மே 22: நஞ்சில்லா உணவு உற்பத்தியை பெருக்க மண்புழு உர கம்போஸ்ட் தயாரிக்கும் வழிமுறை குறித்து வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். திருவையாறு வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வளம் நிலவளம் திட்டத்தில் பயிர் சாகுபடி செயல்விளக்கம், விதைப்பண்ணை அமைத்தல், திருந்திய நெல் சாகுபடி, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி மையம் மற்றும் மண் புழு உரம் உற்பத்தி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மண் புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கங்கள், கழுமங்கலம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்புழு உர கம்போஸ்ட் இடுவதால் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. மற்ற மக்கு உரங்களைவிட மண்புழு உரத்தில் சத்துக்கள் அதிகம். இந்த கம்போஸ்டில் நன்மை தரும் நுண்ணுயிரிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறது. இந்த நுண்ணுயிர்கள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை மண்புழு உரத்தில் நிலைநிறுத்துகிறது. பயிர்களுக்கு வேண்டிய வளர்ச்சி ஊக்கிகளை சுரந்து மண்புழு உரத்தில் நிலை பெற செய்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. பயிரில் நச்சுத்தன்மை இல்லாத தானியங்கள் பெற முடிகிறது. மனிதர்களுக்கு எவ்வித தீங்கு ஏற்படாதவண்ணம் பாதுகாக்கிறது.

மண்புழு உர கம்போஸ்ட் தயாரிக்கும் முறை: பாலித்தின் பை அல்லது சிமென்ட் தொட்டி மற்றும் சிமென்ட் தரை உயரம் 2 அடி மற்றும் அகலம் 3 அடி இருக்க வேண்டும். இதில் தென்னைநார் கழிவு அல்லது கரும்பு தோகைகளை உர உற்பத்திக்கான கட்டமைப்பின் அடிப்பக்கத்தில் 3 சென்டி மீட்டர்  உயரத்திற்கு பரப்ப வேண்டும். பிறகு இதன் மீது மக்கிய சானம், குப்பை இலை தழைகள் போட்டு நீர் தெளித்து பிறகு பசும் சானம் சேர்க்க வேண்டும், தினம்தோறும் நீர் தெளித்து நன்கு மக்கிய பிறகு மண்புழுக்கள் (2000 எண்கள்) தேவைக்கேற்ப இந்த படுகையில் விடவேண்டும். பிறகு தினம்தோறும் தண்ணீர் தெளிக்க வேண்டும். மண் புழுக்கள் மக்கிய தொழு உரத்தை உண்டு அதன் கழிவுகளை மேற்பரப்பில் இடுகிறது. இந்த கழிவுகளை சேகரித்து வைத்து போதுமான அளவு வயலுக்கு இடலாம். இக்கழிவுகள் நெல் வயல், நாற்றங்கால், பூச்செடி, பழமர வகைகள், காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு இடுவதால் நல்ல மகசூல் பெற முடியும்.


நெற்பயிருக்கு ஒரு எக்டேருக்கு 5 டன் மண்புழு உரம் இடலாம். தோட்டகலை பயிரான வாழைமர பயிருக்கு ஒரு மரத்துக்கு 5 கிலோ இடலாம். இந்த உரத்தை மற்ற ரசாயன உரங்களுடன் கலந்து இடகூடாது. மண்புழு உரம் சேமிக்கும் முறை: அறுவடை செய்யப்பட்ட மண் புழு உரத்தை இருட்டான அறையில் 40 சதவீத ஈரப்பதத்தில் சூரியஒளி படாதவாறு வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் ஈரப்பதம் வீணாவதை தடுக்கலாம், மக்கிய உரத்தை பாக்கெட் செய்வதைவிட திறந்த வெளியில் சேமிப்பது சிறந்ததாகும், திறந்த வெளியில் மக்கிய உரத்தை சேமிக்கும்போது தண்ணீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் நுண்ணுயிர்கள் அழிவதை தடுக்கலாம். 40 சதவீத ஈரப்பதத்துடன் வைப்பதால் மண்புழு உரத்தின் தரம் குறையாமல் பாதுகாக்கலாம். குறைந்த உர செலவில் அதிக உற்பத்தி பெறுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்த்து நஞ்சில்லா உணவு உற்பத்தி பெருக்க வழிவகை செய்கிறது. எனவே  விவசாயிகள் மண்புழு உரத்தை பயன்படுத்தி பயன்பெறலாம். இவ்வாறு திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் சரசு தெரிவித்துள்ளார்.

Tags : officer ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...