×

திருப்பனந்தாள் வட்டாரத்தில் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு அழைப்பு

கும்பகோணம், மே 22: திருப்பனந்தாள் வட்டாரத்தில் மானிய விலையில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பனந்தாள் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பாலசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பனந்தாள் வட்டாரத்தில் திருப்பனந்தாள், பந்தநல்லூர், கஞ்சனூர், அணைக்கரை ஆகிய நான்கு இடங்களில் வேளாண் துறைக்கு சொந்தமான வேளாண் கிடங்குகள் இயங்கி வருகின்றன. இந்த வேளாண் கிடங்குகளில் விதை கிராமம் திட்டத்தின்கீழ் மானிய விலையில் கோ 51 சான்று விதைகள் ஒரு கிலோ ரூ.17.50 என  50 சதவீதம் மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. மேலும் தழைசத்தை கிரகித்து பயிருக்கு தரக்கூடிய அசோஸ்பைரில்லம், மண்ணில் உள்ள மணிச்சத்தை பயிர் எடுத்தும் கொள்ளும் நிலைக்கு மாற்றி தரும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


உயிர் உரம் ஏக்கருக்கு 10 பொட்டலங்கள் போதுமானது. விதைக்கு 2 பொட்டலங்கள், நாற்றாங்காலுக்கு 4 பொட்டலங்கள், நடவு வயலுக்கு 4 பொட்டலங்கள் இடவேண்டும். ரசாயன உரத்துடன் உயிர் உரங்கள் கலந்து இடக்கூடாது. மேலும் அசோஸ்பைரில்லம் திரவம் அரை லிட்டர் கொள்ளளவில் போதுமான அளவு இருப்புள்ளது. ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் விதை நெல்லுக்கு 50 மிலி அசோஸ்பைரில்லம் திரவத்துடன் சேர்த்து விதைப்பு செய்ய வேண்டும்.  நாற்றங்காலில் 150 மிலி அசோஸ்பைரில்லம் திரவத்தை விட்டு 150 லிட்டர் தண்ணீர் சேர்த்து நாற்றுக்களை அதில் நனைத்து நடவு செய்ய வேண்டும். மேலும் நடவு வயலில் 200 மிலி அசோஸ்பைரில்லம் திரவத்தை 20 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து வயலில் இட வேண்டும்.

வேளாண் கிடங்கில் நெல் நுண்ணுாட்ட உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு தேவையான நுண்சத்துக்கள் நுண்ணுாட்ட உர கலவையில் உள்ளது. இந்த நெல் நுண்ணூட்டத்தை ஏக்கருக்கு 5 கிலோ வயல் நடுவதற்கு முன்பாக வயலில் இட வேண்டும். மேலும் நடவு நட்ட 20 நாட்களுக்குள் மிகாமல் இடலாம். எனவே திருப்பனந்தாள் வட்டார விவசாயிகள் மேற்கூறிய தொழில் நுட்பங்களை கடைபிடித்து சாகுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : areas ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை