கண்காணிப்பு பணியில் மெத்தனம் குடிபோதையில் அசுர பயணம் வேடிக்கை பார்க்கும் போலீசார்

பரமக்குடி, மே 22: குடிபோதையில் டூவீலரை அதிவேகத்தில் ஒட்டுவதால், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. விபத்தை தடுக்க ரோந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், குற்றச்சம்பவங்களை தடுக்க மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், குற்றச்சம்பவங்களை தடுக்க மாவட்ட எல்லை வரை இரவு, பகல் என ஹைவே போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு அனைத்து வசதிகளையும் உடைய தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம் அதிகவேகமாக செல்லும் வாகனங்களை ஸ்கேன் செய்து, வேகத்தை குறைக்க டிரைவர்களுக்கு அறிவுரையும், அபராதங்களும் விதித்ததால், ஓரளவிற்கு விபத்துகளை தடுக்க முடிந்தது.

இதனால் திருடர்களின் நடமாட்டம் குறைந்து. இரவில் தைரியமாக மக்கள் சென்று வந்தனர். சிறப்பாக செயல்பட்டு வந்த ரோந்து போலீசாரின் செயல்பாடுகள் தற்போது குறைந்து வருகிறது. காரணம் அப்போது வழங்கப்பட்ட ஹைவே வாகனங்களில் உள்ள நவீன கருவிகள் பழுதாகி செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் விபத்து உட்பட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தப்பி செல்லும் திருடர்களை பிடிக்க முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர்.

மேலும் 30 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட போலீசார் தான், இன்றளவும் அதே எண்ணிக்கையில் உள்ளனர். பல பகுதிகள் வளர்ச்சி அடைந்து, குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் பெருகி வருகின்றன. ஆனால் போலீசார் எண்ணிக்கை மட்டும் அதற்கேற்ப அதிகரிக்க வில்லை. இந்நிலையில், கோயில் விழா, கட்சி மாநாடு, கலவரம், இயற்கை பேரிடர் போன்றவற்றிற்கும். ஸ்டேஷனில் இருக்கிற போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்புவதால், ஸ்டேஷன்களில் சில போலீசார் மட்டுமே இருகின்றனர்.

ஏதாவது பிரச்னை, அவசர தேவை என பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தால், சம்பவ இடத்திற்கு வர குறைந்தது ஒரு மணி நேரம் ஆவதால், உடனுக்குடன் சென்று சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இதனால், பரமக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் பகல் நேரங்களில் திருட்டு, வழிப்பறி  சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

இரவு நேரங்களில் தைரியமாக வெளியில் நடமாட முடியாதநிலை உள்ளது. போலீசாரின் கண்காணிப்பு குறைவால், திருட்டு கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்பது, கேஸ் ஏஜென்சி, மின்சார வாரியம், நகராட்சி அலுவலகங்களில் இருந்து வருவதாக சொல்லி வீட்டிற்குள் சென்று மயக்க மருந்து கொடுத்து எளிதாக திருடி வருகின்றனர். வாகனங்கள் அதிகரித்துள்ளதால் விபத்துகளும் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் குடிபோதை, அதிகவேகம், லைசென்ஸ் இல்லாதவர்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. தற்போது என்ன நடந்தாலும் கேட்க போலீசார் இல்லை என நினைக்கும் குற்றவாளிகள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை தடுக்க போலீசார் சிறப்பாக செயல்பட எஸ்.பி.யும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : policemen ,
× RELATED நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்...