×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுரையில் விற்பனைக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக திலகர்திடல் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் திடீர் வாகனசோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் ஒன்றரை கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு
மதுரை உச்சப்பரம்புமேட்டை சேர்ந்த ஜெயந்தி வேளாங்கண்ணி (42). இவர் புதூர் சர்வேயர் காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.அப்போது பின் தொடர்ந்து பைக்கில் வந்த ஆசாமிகள், ஜெயந்திவேளாங்கண்ணி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். புகாரின்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

மூதாட்டி நகை மாயம்
மதுரை செல்லூர் மனவாளன்நகரை சேர்ந்த பாலுச்சாமி மனைவி வீரம்மாள் (69). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகை வடகரைப்பகுதியில் நடந்த கோயில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். விழா முடிந்து வீடு திரும்பி வந்து பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவர் படுகாயம்
பேரையூர் அருகே, அத்திபட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி மகன் கணேஷ்குமார் (12), 7ம் வகுப்பு மாணவர். இவர், அத்திப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே, சாலையோரம் நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாப்புநாயக்கன்பட்டியிலிருந்து மங்கல்ரேவு சென்ற ஜெயக்குமார் என்பவரின் கார், அத்திபட்டி அருகே, டூவீலர்கள் மீது மோதி, கணேஷ்குமார் சைக்கிள் மீதும் மோதியது. இந்த விபத்தில் மாணவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சாப்டூர் போலீசார் வழக்குப்பதிந்து கார் ஓட்டி வந்த ஜெயக்குமாரை கைது செய்தனர்.

ஆட்டோ கவிழ்ந்து 9 பெண்கள் காயம்
திருமங்கலத்தை அடுத்த வலையபட்டியைச் சேர்ந்த பெண்கள் கப்பலூர் சிட்கோவில் வேலை பார்க்கின்றனர். இவர்கள் நேற்று மாலை வேலை முடித்து ஆட்டோவில் ஊருக்கு திரும்பினர். கூத்தியார்குண்டை சேர்ந்த ராஜ்குமார் (38) ஆட்டோவை ஓட்டி வந்தார். திருமங்கலம்-உசிலம்பட்டி ரோட்டில் கண்டுகுளம் அருகே, பாலம் வேலை நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றுப்பாதையில் ஆட்டோ சென்றபோது எதிர்பாராவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் இருந்த நாகஜோதி (36), லட்சுமி (42), அழகம்மாள் (18), அபி (18), முத்துலட்சுமி (22), ரஞ்சிதா (18), ராஜேஸ்வரி (22) ராசி (18) உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு