×

பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கு தனியார் நிதி நிறுவனங்களுக்கு போலீசார் நோட்டீஸ்

புதுக்கோட்டை, மே 22: புதுகை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் தனியார் நிதி நிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் மாரிமுத்து என்பவர் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 28ம் தேதி இவரை காணவில்லை என்று அவரது மனைவி ராணி கணேஷ் நகர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் வங்கியில் கிலோ கணக்கில் நகைகள் காணாமல் போனதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் மாரிமுத்துவின் கார் எரிக்கப்பட்ட நிலையில் வல்லத்திராக்கோட்டை பகுதியில் கிடந்தது. மாரிமுத்துவும், அழுகிய நிலையில் கோடியக்கரை கடல் பகுதியில் பிணமாக கிடந்தார். இதனையடுத்து வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன் டவுன் போலீசில் அளித்த புகாரில், வங்கியில் 13 கிலோ தங்க நகைகள் காணவில்லை என்றும், இதன் மதிப்பு ரூ.4 கோடியே 84 லட்சம் என்றும் அதில் கூறியிருந்தார்.
போலீசார் வங்கி அதிகாரிகள், மாரிமுத்துவின் மனைவி மற்றும் அவரது உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வங்கியில் இருந்து எடுத்த நகைகளை மாரிமுத்து புதுக்கோட்டையில் உள்ள பிற வங்கிகள், நகை அடகு கடைகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் தனது பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்களில் அடகு வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புதுக்கோட்டையில் உள்ள வங்கிகள், நகை அடகு கடைகள், தனியார் நிதி நிறுவனங்களுக்கு சென்று, அங்கு மாரிமுத்து அடகு வைத்துள்ள நகைகளின் விபரங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் புதுக்கோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டு உள்ள நகைகள் வங்கியில் இருந்து மாயமான நகைகள் என்பது தெரியவந்தது. இந்த நகைகள் யார் யார் பெயரில் அடகு வைக்கப்பட்டு உள்ளது என்ற விபரங்களை சேகரித்த போலீசார் அவரிகளிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் இந்த நகைகளை மாரிமுத்து கொடுத்து அடகு வைத்து பணம் வாங்கி கொடுங்கள் எனக்கு விடுமுறை கிடைக்காததால், என்னால் அடகு வைக்க முடியவில்லை எனக்கூறியதால், நாங்கள் நகைகளை அடகு வைத்து கொடுத்ததாக தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் மாரிமுத்து மற்ற வங்கிகள் மற்றும் நகை அடகு கடைகளில் திருடிய நகைகளை அடகு வைத்து உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளாதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தனியார் நிதி நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள நகைகள் குறித்து விபரங்களை தருமாறு சம்மந்தப்பட்ட தனியார் நிதிநிறுவனங்களுக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிதிநிறுவனங்கள் அளிக்கும் விபரங்களின் அடிப்படையில்தான் நகைகளை அடகு வைத்தது யார் என்பது தெரியவரும். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்துவார்கள்.
விசாரணையின் முடிவில் இந்த வழக்கில் யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது தெரியவரும். இதுவரை எந்த ஒரு தனியார் நிதி நிறுவனங்களில் இருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்படவில்லை.

Tags : Punjab National Bank ,institutions ,
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரியில் 17வது ஆண்டு விழா