மனைவியுடன் விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை ஆன்லைன் சூதாட்டம் காரணமா? போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

திருப்பரங்குன்றம், மே 22: மதுரை அருகே, விஞ்ஞானி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு ஆன்லைன் சூதாட்டம் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களுரூவைச் சேர்ந்தவர் வேங்கடசுப்பிரமணியம் (41). இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர். டேட்டா அனாலிஸிஸ் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். இத்துறையில் ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.

மேலும், பல்வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் டேட்டா அனாலிஸிஸ் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னிடம் ஆய்வு மாணவியாக வந்த மதுரை திருநகரைச் சேர்ந்த பட்டுமீனாட்சி (33) என்பவரை காதலித்து, கடந்த 2014 டிசம்பரில் திருமணம் செய்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனியில் தனியாக வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக நாகமலை போலீஸாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வேங்கடசுப்பிரமணியனும், பட்டு மீனாட்சியும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கினர். உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் அக்கம்பக்கத்தினர் கூறுகையில், ‘யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வாழ்ந்து வந்தனர். திடீரென தற்கொலை செய்தது அதிர்ச்சியாக உள்ளது. கணினி, ஆன்லைன் தொடர்பான வேலைகளை கணவனும் மனைவியும் செய்து வந்தனர். மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, கடனாயிருக்கலாம். இந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லாததால், மனம் நொந்து தற்கொலை செய்திருக்கலாம்’ என்றனர். விஞ்ஞானி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Scientist ,
× RELATED திருப்பூர் அருகே முதிய தம்பதியினர் தற்கொலை: போலீஸ் விசாரணை