×

மதுரை மக்களவை, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி மும்முனைப் போட்டியில் முடிசூடப்போவது யார்? நாளை மதியத்திற்குள் தெரியும்

மதுரை, மே 22:  மதுரை மக்களவை மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் நடந்த மும்முனைப் போட்டியில் ஜெயிக்க போவது யார்? என்பது நாளை மதியத்திற்குள் தெரிந்துவிடும். மதுரை மக்களவை தொகுதி தேர்தல் கடந்த ஏப்.18ம் தேதியும், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதியும் நடைபெற்றது. இரண்டு தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை மருத்துவ கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. நாளை (மே 23) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மதுரை மக்களவை தொகுதி நிலவரம் வருமாறு:
மொத்த வாக்கு- 15.38,133
பதிவான வாக்கு- 10,11,649
இந்த தொகுதியில் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், அமமுக ேவட்பாளர் டேவிட் அண்ணாதுரை ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நடந்தது. இது தவிர ம.நீ.ம. உள்ளிட்ட 24 சுயேச்சைகளும் உள்ளனர்.
எனவே, பதிவான 10,11,649 வாக்குகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறப்போவது யார்? என 35 நாட்களுக்கு பிறகு முடிவு நாளை வெளியாக இருப்பதால் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்குகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 838 வாக்குகள் பதிவாகி உள்ளன. இங்கு திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், அதிமுக வேட்பாளர் முனியாண்டி, அமமுக வேட்பாளர் மகேந்திரன் ஆகிய மூவருக்கும் மும்முனை போட்டி நடந்தது. இது தவிர ம.நீ.ம. உள்பட 34 பேரும் போட்டியிட்டனர். இங்கு ஜெயிக்கப்போவது யார்? என்பது 4 நாள் இடைவெளிக்கு பிறகு நாளை முடிவு வெளியாகிறது.

மதுரை மக்களவை தொகுதியில் உள்ள மதுரை கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு, மேலூர் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை, தொகுதி வாரியாக மருத்துவக்கல்லூரியில் தனித்தனி அறைகளில் நடக்கிறது. இதனை மொத்தமாக கூட்டி, சுற்றுவாரியாக முன்னணி நிலவரம் வெளியாகும். மொத்தம் 22 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு தான் வெற்றி பெற்றது யார்? என்ற இறுதி முடிவு அறிவிக்கப்படும்.

இதே போல் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் மருத்துவக்கல்லூரியில் தனி அறையில் நடக்கிறது. இங்கும் முதல் சுற்றில் தொடங்கி முன்னணி நிலவரம் வெளியாகும். மொத்தம் 22 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு தான் யாருக்கு வெற்றி? என்பது அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் தலா 5 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்களில் பதிவான வாக்கு சீட்டுகள் எண்ணப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், ஒப்பிட்டு வெற்றி முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்க தாமதம் ஏற்படும் என தெரிகிறது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் அனைத்து நுழைவு வாயில்களிலும் வெளி ஆட்கள் நுழைய முடியாதபடி போலீசார் தடுப்புகள் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுவரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏக்கள்
1957-  சின்னகருப்பதேவர் (காங்கிரஸ்) 1962-  சின்னகருப்பதேவர் (காங்) 1967- அக்னிராஜ்    (திமுக) 1971 - காவேரிமணியம் (திமுக) 1977- காளிமுத்து  (அதிமுக) 1980- காளிமுத்து (அதிமுக) 1984- மாரிமுத்து  (அதிமுக) 1989- செ.ராமச்சந்திரன் (திமுக) 1991- ஆண்டித்தேவர் (பா.பி.) 1996- செ.ராமச்சந்திரன் (திமுக) 2001- சீனிவேல்  (அதிமுக) 2006- போஸ்   (அதிமுக) 2011- ராஜா   (தேமுதிக) 2016- சீனிவேல் (அதிமுக) 2016 நவம்பர் இடைத்தேர்தல்- போஸ் (அதிமுக) இவரது வெற்றி செல்லாது எள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மதுரையை கைப்பற்றிய கட்சிகள்
1952- 1957 காங்கிரசில் இரட்டை உறுப்பினர்கள், 1957- 1962 இந்திய கம்யூனிஸ்ட், 1962- 1967 காங்கிரஸ், 1967- 1971 கம்யூனிஸ்ட், 1971-1977 காங்கிரஸ், 1977 முதல் 1980 காங்கிரஸ், 1980- 1984 காங்கிரஸ், 1984-89: காங்கிரஸ், 1989-91 காங்கிரஸ், 1991-96: காங்கிரஸ், 1996- 98 த.மா.கா, 1998- 99 ஜனதா கட்சி, 1999- 2004 மார்க்சிஸ்ட், 2004- 2009 மார்க்சிஸ்ட், 2009- 2014 திமுக, 2014-2019 அதிமுக.

Tags : Madurai Lok Sabha ,Tiruparankundam Assembly Constituency Who ,
× RELATED பஜ்ஜி சுட்டு வாக்கு சேகரித்த ஓ.பி.எஸ்