×

மாலையணிவித்து மரியாதை பழநியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா சித்தனாதன் விபூதி நிறுவனம் சார்பில் நடந்தது

பழநி, மே 22: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா சித்தனாதன் விபூதி நிறுவனம் சார்பில்
நடந்தது. விபூதியின் புகழை உலகிற்கு உணர்த்தியவர் திருஞானசம்பந்தர். சைவ சமய பக்தி நெறியை பின்பற்றியவர். தேவாரத்தை இயற்றியவர்.  சமயக்குரவர் மற்றும் 63 நாயன்மார்களுள் ஒருவராக இருப்பவர் ஆவார்.

3வது குழந்தையாக  இருந்தபோது அழுது கொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு சிவபெருமானுடன் வந்த உமாதேவியார் ஞானப்பால் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நாளை நினைவுகூர்ந்து பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். நேற்று சித்தனாதன் விபூதி நிறுவனம் சார்பில் இவ்விழா நடந்தது.

தெற்கு மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயிலின் உட்பிரகாரத்தை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான் சமேத உமாதேவியார் வடக்கு பிரகாரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் தங்க கிண்ணத்தில் ஞானப்பால் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது. கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பூஜைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம்
வழங்கப்பட்டது.

விழாவில் அடிவாரம் கொங்கு வேளாளர் அமைப்பு நிர்வாகி மாரிமுத்து, சுகந்த விலாஸ் மகேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் முருகபாண்டியன், சுந்தர், வள்ளுவர் தியேட்டர் செந்தில், கண்காணிப்பாளர் நெய்க்காரப்பட்டி முருகேசன் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சித்தனாதன் சன்ஸ் எஸ்.ஜி.சிவனேசன், எஸ்.ஜி.பழனிவேல், எஸ்.என்.செந்தில்குமார், எஸ்.என்.விஜயகுமார், எஸ்.ஜி.எஸ்.கார்த்திகேயன், எஸ்.ஜி.எஸ் ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : Sidhyanathan ,
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு