×

தென்னை மரத்தில் ஏறி இறங்க முடியாமல் தவித்த வாலிபர் மீட்பு தீயணைப்பு துறையினர் அசத்தல்

கொள்ளிடம், மே 22: கொள்ளிடம் அருகே சையது நகரில் தென்னை மர உச்சியில் ஏறி மட்டை வெட்டும் போது கையின் மூட்டு நழுவியதால் இறங்க முடியாமல் தவித்த இளைஞரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் சையது நகரை சேர்ந்த பஞ்சமூர்த்தி என்பவரின் மகன் மணிகண்டமூர்த்தி (25) கூலித்தொழிலாளி. இவர் நேற்று வீட்டுத்தோட்டத்தில் உள்ள ஒரு தென்னை மரத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்து கொண்டு தேங்காய்களை பறித்து விட்டு, சில தென்ன மட்டைகளை வெட்டி கீழே தள்ளி விட்டார். அப்போது மூர்த்தியின் வலது கையின் பந்து கிண்ண மூட்டு நழுவியது.

இதனால் திடீரென கையில் வீக்கம் ஏற்பட்டு கையை அசைக்க முடியாத நிலையில் வலியால் கூச்சல் போட ஆரம்பித்தார். அப்போது பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஒடிவந்து மரத்தில் உள்ளவரை மீட்க முடியாமல் திணறினர்.
இதுகுறித்து சீர்காழி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 4 ஏணிகளை பயன்படுத்தி 2.30 மணி நேரம் போராடி மரத்தின் உச்சியிலிருந்த இளைஞரை பத்திரமாக மீட்டு தரைக்கு கொண்டு வந்தனர். அப்போது கிழே தயார்நிலையில் இருந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு எலும்பு முறிவு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : fishermen ,rescue firemen ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...