×

கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

திருவள்ளூர், மே 22: திருவள்ளூர் அருகே இருளஞ்சேரி கிராமத்தில், அலோபதி சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த இருளஞ்சேரி கிராமத்தில், பேரம்பாக்கம் - தக்கோலம் சாலையில், போலி டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்துள்ளதாக மாவட்ட இணை இயக்குனர் இளங்கோவனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு அவர் சென்று  திடீர் ஆய்வு செய்தார். அப்போது, அங்கு கிளினிக் நடத்திவந்த அரக்கோணத்தை சேர்ந்த சாரதி(61) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில், அவர் எந்த தகுதியும் இல்லாமல் நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட இணை இயக்குனர் இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில், அவரை மப்பேடு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கிராமப்புறங்களில், வேறு படிப்பு படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பது, டாக்டர்களிடம் உதவியாளராக இருந்து கொண்டு வீட்டில் மருத்துவம் பார்ப்பது, படிக்காமலேயே டாக்டர் என கூறி கிளினிக் நடத்தி வருவது என பல முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் கிராமங்களில் வசிப்பவர்கள் காய்ச்சலுக்கு உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நோய் முற்றி உயிர் பலி ஏற்படும் அபாயம்
உள்ளது.எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உயிர்பலி ஏற்படுமுன், மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில், சுகாதாரத்துறை, போலீசார் இணைந்து, மாவட்டத்தில் உள்ள போலி டாக்டர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...