கஞ்சா கடத்திய ஆசாமி கைது: ஆட்டோ பறிமுதல்; டிரைவருக்கு வலை

குன்றத்தூர்,மே 22: குன்றத்தூர் அருகே நேற்று முன்தினம் இரவு கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. குன்றத்தூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக குன்றத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் தனிப்படை அமைத்து, அப்பகுதி முழுவதம் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குன்றத்தூர், மூன்றாம் கட்டளையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அதை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் டிரைவருடன், மாற்று திறனாளி ஒருவர் இருந்தார்.

அப்போது, ஆட்டோ டிரைவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே போலீசார் அவரை விரட்டி சென்றனர். ஆனால் அவர் தப்பிவிட்டார். ஆட்டோவில் வந்த மாற்றுத் திறனாளி ஆட்டோவிலேயே இருந்தார். இதனால், சந்தேகம் அதிகரித்த போலீசார், ஆட்டோவில் இருந்த பையை சோதனை செய்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்து, அதில் இருந்த மாற்று திறனாளியை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனா். அதில், குன்றத்தூர் மலையடி வாரத்தை சேர்ந்த தயாளன் (44). கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அதனை பிரித்து குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்தது தெரிந்தது.தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Assam ,Kanja Drive ,
× RELATED அசாமில் நிலநடுக்கம்