×

இந்திய ரயில்பெட்டி தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 2,500 கோடி

சென்னை, மே. 22: ‘‘இந்திய ரயில்வேயின் ரயில்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளின் கட்டமைப்பு  மேம்பாட்டுக்காக ₹2,500 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை ‘ஐசிஎப்’ல் நவீன வசதிகளுடன் கூடிய ‘ரயில்-19’ தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார். சென்னையில் உள்ள ‘ஐசிஎப்’, இந்திய ரயில்வேயின் தலைசிறந்த ரயில்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையாக விளங்கி வருகிறது. இங்கு, தானியங்கி ரயில் பெட்டிகள், சொகுசு ரயில்பெட்டிகள், இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான, ‘வந்தே பாரத் விரைவு ரயில்’க்கான ரயில்பெட்டிகள் என பல்வேறு ரகங்களில், 60,000 பெட்டிகள் துவக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை தயாரித்துள்ளது.

‘ஐசிஎப்’ தயாரித்த 60,000வது ரயில்பெட்டி (தானியங்கி ஆய்வு ரயில் பெட்டி) நேற்று ரயில்வே வாரிய (ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்கள் துறை) உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் முன்னிலையில், ஐசிஎப் மூத்த ஊழியர் கே.வெங்கடேஸ்வரலு, ‘ஐசிஎப்’பில் இருந்து தெற்கு ரயில்வேக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தார். பிறகு அகர்வால் ‘ஐசிஎப்’பில் இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்ய தயாராகி வரும் ரயில்பெட்டிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:
‘ஐசிஎப்’ கடந்த ஆண்டில் 3,262 ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை செய்து, உலகின் மிகப்பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலையாக திகழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உற்பத்தியாண்டில் (2019-20) 4,000 ரயில் பெட்டிகளை தயாரித்து தன் சாதனையை தானே முறியடிக்கும் என்ற நம்பிக்கை என்ற உள்ளது. ‘ஐசிஎப்’பால் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத ரயில், புதுடெல்லி - வாரணாசி இடையே முழுமையான பயணிகள் ஆதரவுடன் இயக்கப்படுகிறது. இந்த ஆண்டில் அதே (ரயில் -18) வடிவமைப்பில் குளிர்சாதன வசதி மற்றும் படுக்கை வசதியுடன் ‘ரயில்- 19’ என்ற பெயரில் ரயில் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மேலும் ‘ரயில்-18’ போன்ற 40 ரயில் தொடர்களை ‘ஐசிஎப்’ உற்பத்தி செய்ய உள்ளது. ‘ரயில்-18’ன் இயக்கத்தின்போது கால்நடைகள் வந்து மோதி ரயிலின் முன்புறம் சேதம் ஆவதை தவிர்க்க அலுமினியம் கொண்ட வடிவமைப்பு உபயோகப்படுத்தப்பட உள்ளது. ‘ஐசிஎப்’ கடந்த 90ம் ஆண்டுகளிலேயே இந்தியாவின் முதல் மெட்ரோ ரயிலான, ‘கொல்கத்தா மெட்ரோ ரயில் பெட்டி’களை தயாரித்துள்ளது. ‘ஸ்டாண்டர்டு காஜ்’ அளவு கொண்ட நவீன மெட்ரோ ரயில்களை, ‘ஐசிஎப்’ தயாரிப்பது குறித்து மாநில அரசுகள் மற்றும் மத்திய நகர்ப்புற அமைச்சகத்துடன் கலந்து பேசி முயற்சிகள் மேற்கொள்ளப்படும். ‘ரயில்-18’ போன்ற ரயில் தொடர்களை சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளது. இந்திய ரயில்வேயின் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் அது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இந்திய ரயில்வேயின் ரயில்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ₹2,500 கோடி ஒதுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதில், ₹500 கோடி ‘ஐசிஎப்’புக்கு ஒதுக்கப்படும். சென்னை புறநகர் ரயில்களில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரயில்கள் இயக்குவது குறித்து, ரயில்வே வாரியத்துடன் ஆலோசித்து விரைவில் தெற்கு ரயில்வேக்கு அறிவுறுத்தப்படும் என்றார். முன்னதாக, ராஜேஷ் அகர்வால், ‘ஐசிஎப்’ அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பித்தார். ‘ஐசிஎப்’பில் கடந்த ஆண்டு அதிகளவில் ரயில்பெட்டிகள் தயாரிக்க சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

Tags : Indian Railways ,
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...