×

மானாம்பதி வழியாக அரசு பஸ்களை இயக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்போரூர், மே 22: செங்கல்பட்டு, திருப்போரூர்,  திருக்கழுக்குன்றம், அடையாறு ஆகிய பகுதிகளில் இருந்து மானாம்பதி வழியாக  மாவட்ட போக்குவரத்து நிர்வாகம் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். திருப்போரூர்- திருக்கழுக்குன்றம் இடையே அமைந்துள்ள மானாம்பதி ஊராட்சியில் மானாம்பதி, சந்தனாம்பட்டு, ஆமையாம்பட்டு, ஆனந்தபுரம், காமராஜ்நகர், பெரியார் நகர், ஈச்சம்பள்ளம், தட்சிணாவரம், அகரம், செங்கழுநீர் ஓடை ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு வேலை, பள்ளி கல்லூரி, வியாபாரம் உள்பட பல்வேறு காரணங்காக தினமும் சென்று வருகின்றனர். மேற்கண்ட பகுதி மக்களின் வசதிக்காக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அடையாறில் இருந்து மானாம்பதிக்கு ஒரே ஒரு பஸ் இயக்கப்படுகிறது. விழுப்புரம் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் செங்கல்பட்டு பணிமனையில் இருந்து (தஎ டி20) ஒரு அரசு பஸ் மானாம்பதி - செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது.

அதேபோல் கல்பாக்கம் பணிமனையில் இருந்து மானாம்பதி, முள்ளிப்பாக்கம் வழியாக திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருப்போரூர் வரை (தஎ 119பி) பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் அதிகாலை 4.30 மணிக்கு இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அரசு பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன. மேலும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மேல்மலையனூர், திருவண்ணாமலை, மேல்மருவத்தூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்சாக மாற்றி கூடுதல் வருவாய் ஈட்டும் நோக்கத்தில் பணிமனை நிர்வாகம் இந்த பஸ்களை மாற்றி விடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மானாம்பதி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் கிராம மக்கள் தினமும் சென்னை மற்றும் அதைத்தாண்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, போதுமான பஸ் வசதி இல்லை. மேலும் இரவு 8 மணிக்கு மேல் மானாம்பதி செல்ல சென்னை, தாம்பரம், கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய இடங்களில் இருந்து பஸ் வசதி எதுவும் இல்லை. இதனால் இரவு நேர வேலை செய்வோர் திருப்போரூரில் இருந்து காட்டுப்பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் இடையே கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தினால், இவ்வழியே உள்ள கிராம மக்கள் செங்கல்பட்டு, மாமல்லபுரம், கல்பாக்கம் செல்லவும், திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்ல மிகவும் உதவியாக இருக்கும் என பொது மக்கள் கருதுகின்றனர். எனவே செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அடையாறு ஆகிய பகுதிகளில் இருந்து மானாம்பதி வழியாக மாவட்ட போக்குவரத்து நிர்வாகம் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...