×

தொழுப்பேடு அருகே தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா

மதுராந்தகம், மே 22: அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சிறுபேர் பாண்டி கிராமம் தண்டு மாரியம்மன் கோயிலில் 3 நாள் திருவிழா நடந்து முடிந்தது. அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே சிறுபேர் பாண்டி கிராமத்தில்,  தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி திருவிழா கூழ்வார்த்தலுடன் 3 நாட்கள் நடத்தப்படும்.இதையொட்டி, முதல் நாளன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்கள் ஊர்வலம், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தன. 2வது நாளன்று கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்திய கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடத்தினர். இதில் கிராம மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் உள்ள அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கெண்டனர்.

3ம் நாளான நேற்று முன்தினம் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில், சுமார் 200 ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கோயிலில் அங்கப்பிரதட்சனம் செய்தனர். அதை தொடர்ந்து எலுமிச்சை பழங்கள் மூலமாக உடல் முழுவதும் அலகு குத்துதல், காலில் கட்டை கட்டி உயரத்தில் நடத்தல் உள்பட பல்வேறு நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர். விழாவில் சென்னை, திண்டிவனம், தொழுப்பேடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை சிறுபேர் பாண்டி கிராம மக்கள் செய்தனர்.


Tags : festivities ,temple ,Thandu Mariamman Temple ,
× RELATED தீபாவளியை ஒட்டி கடைகளில் அலைமோதும்...