×

100 கிலோ கடல் மண்புழுக்கள் சிக்கின

சென்னை, மே 22: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளது. இந்த சாலை வழியாக தமிழகத்தில் இருந்து, ஆந்திராவுக்கு கடல் மண்புழுக்கள் கடத்துவதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் குமரன், எஸ்.ஐ., கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சேர்மன் என்று பொறிக்கப்பட்ட விலை உயர்ந்த கார் வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஐஸ்சுடன் கூடிய சுமார் 100 கிலோ மண்புழுக்கள் இருந்தது தெரிந்தது. இதுபற்றி கார் டிரைவர் மற்றும் அவருடன் வந்தவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து போலீசார், 2 பேரையும், காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரித்தனர்.

அதில், பொன்னேரியை சேர்ந்த அஜித் (25), பழவேற்காட்டை சேர்ந்த அருள் (42) என்றும், கடல் மண்புழுக்கள் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிக்கு கொண்டு சென்று, அங்குள்ள இறால் பண்ணைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது என தெரிந்தது. மேலும் விசாரணையில், இவர்கள் வந்த கார் பழவேற்காட்டை  சேர்ந்த அதிமுக மின்வள கூட்டுறவு சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன்  என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அந்த காரை பறிமுதல் செய்த போலீசார், போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் மண் புழுக்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...