×

திருப்போரூர் வட்டத்தில் குடிநீர் எடுக்க லாரிகளுக்கு தடை

திருப்போரூர், மே 22:  திருப்போரூர் வட்டத்தில்  அடங்கிய திருப்போரூர், தண்டலம், சிறுசேரி, தாழம்பூர், நாவலூர், இள்ளலூர்,  பொன்மார், சோனலூர், புதுப்பாக்கம், பனங்காட்டுப்பாக்கம், வெண்பேடு, காயார்,  ஆலத்தூர், பையனூர் ஆகிய இடங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து லாரிகள்  மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, தென்சென்னை மற்றும் சென்னைப் புறநகர்  பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, கந்தன்சாவடி, துரைப்பாக்கம்,  மேடவாக்கம், காரப்பாக்கம், சோழிங்க நல்லூர், நாவலூர், படூர், தாழம்பூர்,  சிறுசேரி, கேளம்பாக்கம், படூர் ஆகிய பகுதிகளில் உள்ள மென்பொருள்  நிறுவனங்களுக்கும், இப்பகுதிகளில் உள்ள சுமார் 6 லட்சம் அடுக்குமாடி  குடியிருப்புகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன் தண்டலம் கிராமத்தில் தண்ணீர் எடுக்க வந்த லாரியை  பொதுமக்கள் மறித்து, தண்ணீர் எடுக்க கூடாது என்று தடை விதித்தனர்.

இந்நிலையில் திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய கிராமங்களில் உள்ள விவசாய  கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் எடுக்க திருப்போரூர்  வட்டாட்சியர் ராஜகுமார் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தகவல் அந்தந்த கிராம நிர்வாக  அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மூலம் கிணறுகளின் உரிமையாளர்கள், தண்ணீர்  எடுத்து செல்வோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தென் சென்னை மாவட்ட  தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம், திருப்போரூர் ஒன்றிய தண்ணீர் லாரி  உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இயக்கப்பட்டு வந்த சுமார் 500க்கும்  மேற்பட்ட டேங்கர் லாரிகள் கடந்த நேற்று முன்தினம் மாலை முதல் தண்ணீர் எடுக்க  அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தடை உத்தரவால் நேற்று  திங்கட்கிழமை முதல் 500க்கும் மேற்பட்ட குடிநீர் டேங்கர் லாரிகள் பழைய  மாமல்லபுரம் சாலையில் நாவலூர், ஏகாட்டூர் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி  வைக்கப்பட்டன.
இதுகுறித்து திருப்போரூர் வட்டாட்சியர் ராஜகுமாரிடம் கேட்டபோது, விவசாய கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு வணிக  நோக்கத்தில் தண்ணீரை எடுத்துச் செல்லக்கூடாது என்று செங்கல்பட்டு  ஆர்டிஓ மூலம் எனக்கு உத்தரவு வந்தது. அந்த உத்தரவை செயல்படுத்தும்  விதமாக கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் இந்த தகவலை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து  விற்பனை செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவும் உள்ளது என்றார்.

தடைக்கு வரவேற்பு வருவாய்த்துறையின் இந்த தடை குறித்து காயார் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை என்பவர் கூறியதாவது:
திருப்போரூர் ஒன்றியத்தில் தற்போது 30க்கும் மேற்பட்ட கிராமங்களில்  விவசாயம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு போதிய ஆட்கள்  கிடைக்காததும், வயல்வெளி கிணற்றில் தண்ணீரை விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு ₹3000 முதல் ₹5000 வரை எந்த செலவும் இன்றி கிணற்றின்  உரிமையாளருக்கு கிடைப்பதால் பலரும் இந்த தொழிலில் இறங்கி விட்டனர். இதன்  காரணமாக விவசாயம் அழிந்து விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பலரும்  செக்யூரிட்டி வேலைக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பல கிராமங்களில்  தண்ணீர் எடுக்க தடை விதிக்கக் கோரி மக்கள் போராட்டம் நடத்தும்போது அதை  டேங்கர் லாரி உரிமையாளர்கள் சரிக்கட்டி தொடர்ந்து தண்ணீர் எடுத்து வந்தனர்.  தற்போது இந்த தடை சரியான நேரத்தில் வந்துள்ளது. இந்த தடை  விதிக்கப்படாவிட்டால் இன்னும் 10 ஆண்டுகளில் ஓஎம்ஆர் சாலை பாலைவனமாக  மாறி விடும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த தடையை விலக்கக் கூடாது என்றார்.

வேலை நிறுத்தம்
தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் நிஜலிங்கம் கூறுகையில், தற்போது நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. வருவாய்த்துறைதான் தடை விதித்துள்ளது. குறிப்பாக திருப்போரூர் வட்டாட்சியர் உத்தரவிட்டு  கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது  தேர்தல் முடிவு ஏற்படும் வரை சந்திக்க முடியாது என கலெக்டர் கூறி  விட்டதால் அவரை சந்திக்கவில்லை. சங்க உறுப்பினர்களுடன் கலந்து பேசி இந்த  தடையை விலக்கா விட்டால் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்  செய்வது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

ஐடி நிறுவனங்களுக்கு பாதிப்பு
சிறுசேரி ஐடி மென்பொருள் பூங்காவில் 50க்கும் மேற்பட்ட மென்பொருள்  நிறுவனங்கள் உள்ளன. இங்கு இரண்டரை லட்சம் பேர் வேலை செய்கின்றனர்.  இதுமட்டுமின்றி ஓஎம்ஆர். சாலையில் 30க்கும் மேற்பட்ட மென்பொருள்  நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், கல்லூரிகள், நூற்றுக்கணக்கான  அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. சுமார் 6 லட்சம் பேர் இந்த  குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இவை அனைத்தும் டேங்கர் லாரி தண்ணீரை  நம்பியே உள்ளன. இந்த தடை இன்னும் ஓரிரு நாட்கள் நீடித்தால் மென்பொருள்  நிறுவனங்கள், ஓட்டல்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அடுக்குமாடி  குடியிருப்புகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED அதிகாரிகளின் அலட்சிய வட்டத்தில்...