×

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் குழந்தையை பார்க்க வந்த உறவினரிடம் லஞ்சம் கேட்கும் செக்யூரிட்டி வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

திருவண்ணாமலை, மே 22: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை பார்க்க வந்த உறவினரிடம், செக்யூரிட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல், கர்ப்பிணிகள், உள்நோயாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் செக்யூரிட்டிகள், உதவியாளர்கள் ₹30 முதல் ₹300 வரை லஞ்சம் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம், குழந்தை பிறந்ததும் ஆண் குழந்தை என்றால் ₹500, பெண் குழந்தை என்றால் ₹300 என லஞ்சம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனை சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று, வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், மருத்துவமனையில் பிறந்த தனது உறவினரின் குழந்தையை பார்க்க வரும் ஒரு பெண்ணிடம், அங்குள்ள செக்யூரிட்டி ஒருவர் லஞ்சம் கேட்டு பெறுகிறார். இந்த வீடியோ தற்போது திருவண்ணாமலை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனைக்கு வந்தவர்கள் கூறுகையில், `திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களை பார்க்க வந்தால், அங்கு பணிபுரியும் செக்யூரிட்டிகள் மற்றும் உதவியாளர்கள் லஞ்சம் கேட்கின்றனர். அவர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் உள்ளே செல்ல முடிகிறது. இது சம்பந்தமான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. எனவே இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Tags : Tiruvannamalai Government Hospital ,
× RELATED சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கில்...