×

ஊட்டி அசெம்பளி தியேட்டரில் ஹிந்தி சினிமா பார்த்து ரசித்தார் கவர்னர்

ஊட்டி,  மே 21:  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்துடன்  ஊட்டியில் உள்ள அசெம்பளி தியேட்டரில் ஹிந்தி திரைப்படம் பார்த்து  மகிழ்ந்தார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த 17ம் தேதி  ஊட்டி வந்தார். மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், தொடர்ந்து இன்று வரை  ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியுள்ளார். இன்று நடக்கும் மலர்  கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு  பரிசுகளை வழங்கவுள்ளார். இந்நிலையில், ஊட்டியில் உள்ள அசெம்பளி அரங்கில் திரைப்படம் பார்க்க  வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு  முன்னதாகவே இதற்கான உத்தரவு ராஜ்பவன் மாளிகையில் இருந்து வந்துள்ளது.  தற்போது அசெம்பளி தியேட்டர் (அரசு கட்டுப்பாட்டில் உள்ள தியேட்டர்)   நவீனப்படுத்தப்பட்டுள்ளதால், 1960களில் வெளியான திரைப்படங்களை, அதாவது  பிலிம் ரோல் கொண்ட திரைப்படங்களை திரையிட முடியாது என்ற நிலை  ஏற்பட்டுள்ளது.

பின், இதற்காக மும்பையில் இருந்து சில டெக்னீசியன்கள்  வரவழைக்கப்பட்டு, ஊட்டி அசெம்பளி தியேட்டர் புரஜெக்டர் அறையில் சில  மாற்றங்கள் செய்யப்பட்டு, கவர்னர் விருப்பம் தெரிவித்த முகல் இ அசாம்  திரைப்படம் திரையிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு இந்த  திரைப்படம் திைரயிடப்பட்டது. இதற்காக, வழக்கம் போல் மாலை நேர ஷோ ரத்து  செய்யப்பட்டுள்ளது. கவர்னருக்காக இந்த பிரத்யேக காட்சி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றரை மணி நேரம் ஓடிய இந்த திரைப்படத்தை கவர்னர் பன்வாரிலால்  மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். திரைப்படம் இரவு 12.30  மணிக்கு நிறைவடைந்தது. அவருடன் கூடுதல்  முதன்மை செயலாளர் ராஜகோபால், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்பி.,  சண்முகப்பிரியா உட்பட உயர் அதிகாரிகள், ராஜ்பவன் அதிகாரிகள் படம்  பார்த்தனர். இதில் இடைவேளையின் போது, அசெம்பளி தியேட்டரில்  அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் கண்டு ரசித்தார். அங்கு  வைக்கப்பட்டுள்ள பழமை வாய்ந்த திரைப்பட கருவி, கேமரா போன்றவை  குறித்து கேட்டறிந்தார்.

Tags : governor ,Ooty Assembly Theater ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...