×

ஜவுளி சந்தையில் மாற்றம் செய்யப்பட்ட பள்ளி சீருடை விற்பனை

ஈரோடு, மே 21:   ஈரோடு கனிமார்க்கெட்டில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடப்பாண்டு மாற்றப்பட்ட சீருடைகள் ரெடிமேடாக விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பாண்டு முதல் புதிய சீருடைகள் மாற்றப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், இளம் பச்சை நிற கட்டம் போட்ட மேல் சட்டையும், அதேபோல் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சந்தன நிற கால் சட்டையும், சந்தன நிற கட்டம் போட்ட மேல் சட்டையும் மற்றப்பட்டுள்ளது. அதே போல் மாணவிகளுக்கு மட்டும் கூடுதலாக சந்தன நிற மேல் கோட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக மாற்றப்பட்ட சீருடைகள் ஈரோடு கனிமார்க்கெட் (ஜவுளி சந்தையில்) ரெடிமேடாக தைத்து விற்பனைக்கு செய்யப்படுகிறது.

 துகுறித்து கனிமார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது: பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாற்றப்பட்ட புதிய சீருடைகளுக்கான துணி ரகங்களை குஜராத், மும்பை போன்ற பகுதியில் கொள்முதல் செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டம் சிவகிரி, அரச்சலூர், சென்னிமலை போன்ற பகுதியில் உள்ள கார்மென்ட்ஸ்களில் தைத்து ரெடிமேடு சீருடைகளாக தயாரிக்கின்றனர். பள்ளிகளில் இலவசமாக சீருடைகள் கொடுத்தாலும், மாணவ-மாணவிகளுக்கு ஏற்ற உடல் வடிவமைப்பில் சீருடைகள் கிடைப்பதில்லை.

மேலும் புதிதாக பள்ளிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக சீருடை கொடுக்கப்படாது என்பதால், சிலர் எங்கள் கடைகளில் வாங்கி செல்வார்கள். அதனை கருத்தில் கொண்டு நாங்கள் புதிய சீருடைகளை விற்பனைக்கு வைத்துள்ளோம்.  எங்களிடம் மாணவர்களுக்கு ரூ.300 முதல் ரூ.450 வரையிலும், மாணவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.650 வரையிலும் சீருடைகள் எங்களிடம் விற்பனை செய்யப்படுகிறது.  இதே துணிகளை வெளியில் வாங்கி தைத்து போட்டால் ரூ.800க்கு மேல் செலவாகும். பள்ளிகள் திறக்கப்பட்டதும் சீருடைகள் விற்பனை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை