×

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலுள்ள மாந்தோப்புகளில் யானைகள் அட்டகாசம் விவசாயிகள் வேதனை

ராஜபாளையம், மே 21: ராஜபாளையத்தில் மாந்தோப்புக்குள் புகுந்த யானைக் கூட்டம் அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட மா மரங்களை ஒடித்து சேதப்படுத்தியது. மேலும் பெரும்பாலான மாங்காய்களையும் தின்றுவிட்டதால், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தம்பாத்து ஊரணியை அடுத்து வண்டிப்பண்ணை பீட் அமைந்துள்ளது. இங்கு ராஜபாளையத்தை சேர்ந்த சீனிவாசன், சேவியர், சந்திரன், வெங்கலம் மற்றும் துரைசாமி உள்ளிட்ட சிறு விவசாயிகள் மா விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது காய்கள் விளைச்சல் அடைந்து வியாபாரத்திற்கு அனுப்பும் நிலையில் உள்ளது. சில மரங்களில் உள்ள மாங்காய்களை விவசாயிகள் விற்பனை செய்துவிட்ட நிலையில், பல மரங்களில் காய் பறிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் வனத்தில் இருந்து உணவு தேடி வரும் யானை கூட்டம் விவசாய தோப்புகளில் புகுந்து விடுகின்றன. நேற்றுமுன்தினம் இரவு மாந்தோப்பில் புகுந்த குட்டிகள் உள்ளிட்ட 7 யானைகள் அங்கு இருந்த 300க்கும் மேற்பட்ட மா மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது.  ஒரு மரத்தை வேருடன் சாய்த்து நாசப்படுத்தியதுடன், காய்கள் அதிகமாக விளைந்துள்ள கொப்புகளை ஒடித்து காய்களை தின்றுள்ளன. பல்வேறு சிரமங்களுக்கு இடையில், பல வருடங்களாக வளர்க்கப்பட்ட மரங்களை யானைகள் ஒடித்து சேதப்படுத்துவது விவசாயத்தை பாதிப்பதாக, விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.'

காய்த்த நிலையில் உள்ள மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் தற்போது வரை ரூ.2 லட்சத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் யானைகள் கூட்டமாக வருவதால் பட்டாசு வெடித்தும் அதை விரட்ட முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். எனவே வனத்துறையினர் சேதமான மரங்களுக்கு தகுந்த நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போதுமான ஆழத்திற்கு அகழி வெட்டி யானைகள் விவசாய தோப்புகளுக்குள் வராதவாறு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : mountain ranges ,Western Ghats ,Rajapalayam ,peasants ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...