வெயிலின் தாக்கம் இருக்கும் கடமலை - மயிலை ஒன்றியத்தில் இடைத்தரகர்களால் நாசமாகும் இலவம்பஞ்சு விவசாயம்

வருசநாடு, மே 21: கடமலை - மயிலை ஒன்றியத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் இலவம்பஞ்சு விவசாயம் நடைபெறுகிறது.  ஒவ்வொரு ஆண்டும் இலவம்பஞ்சு சீசன் 3 மாதங்கள் தொடங்கி முடியும். தற்போது பருவமழை முறையாக பெய்யாத காரணத்தால் இலவம்பஞ்சு விவசாயிகள் மிகவும் நொடிந்து போய் உள்ளனர். இதனால் விளைச்சல் குறைவாக உள்ளதுடன், விலையும் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய  காரணம் இடைத்தரகர்களின் தலையீடுதான் காரணம் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இலவம்பஞ்சு கிலோ 69 ரூபாய் வரை விற்பனையானது. ஒரு சாக்கு மூட்டை அளவு 30 கிலோவில் இருந்து 35 கிலோ வரை இருக்கும் ஆனால், இலவம்பஞ்சு பதம் என்ற பேரில் விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் எடையை கழித்து வாங்குவதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

அத்துடன் விவசாயிகளை வீடு ேதடி வந்து மூளைச்சலவை செய்து பணம் கொடுத்து தன் வலையில் வீழ்த்தும் பணிகளில் இடைத்தரகள் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இலவம் பஞ்சை விலைக்கு போடும் போதும் கண்ணீர் விட்டு வருகின்றனர். அத்துடன் கடனில் இருந்து மீளமுடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து மயிலாடும்பாறை விவசாயி கண்ணன் கூறுகையில், ``கடந்த 10 ஆண்டுகளாக இடைத்தரகர்கள் ஆதிக்கம் கூடிக்கொண்டே வருகிறது. இலவம் பஞ்சு விலை குறைந்த விலையில் எடுப்பதற்கும், விலையை ஏற்றாமல் இருப்பதற்கும்  முக்கிய காரணம் இவர்கள் தான். விவசாயிகளை வஞ்சிக்கும் இவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

தர்மராஜபுரத்தை சேர்ந்த பிரபு கூறுகையில், `` ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் கடைசி மாதத்தில் ஏழைகளை குறிவைத்து இடைத்தரகர்கள் பணத்தை முன்கூட்டியே கொடுத்து கடனாளி ஆக்குகின்றனர்.  இதனால்தான் இலவம் பஞ்சு விலை கூடுவதில்லை. இதனால் இடைத்தரகர்கள் வைத்த விலை தான். அவர்கள் கமிஷனுக்காக வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இலவம்பஞ்சு விவசாயிகள்  நொடிந்து தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, இலவம் பஞ்சிற்கு தமிழக அரசு நிர்ணய விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், ``ஒவ்வொரு ஆண்டும் இலவம்பஞ்சு விவசாயிகள் தற்கொலையை நோக்கி செல்கின்றனர். ஏனென்றால் முறையான விளைச்சல் இருந்தால், விலை கிடைப்பதில்லை. முறையான விலை இருந்தால் விளைச்சல் இருப்பதில்லை. இதனால் விவசாயிகள் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இலவம் பஞ்சிற்கு முறையான நிர்ணய விலை கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இலவம் பஞ்சு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வறுமை நிலை நீங்காது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அத்துடன் இடைத்தரகர்களை முற்றிலும் ஒழித்து இத்தொழிலை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: