×

ஆளும் கட்சியினரின் சிபாரிசு கடிதத்துடன் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் உதவித்தொகைக்கு குவியும் முதியோர் நெருக்கடியில் பரிதவிக்கும் அதிகாரிகள்

பரமக்குடி, மே 21:  பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் குவியும் முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்கள், ஆளும் கட்சியினரின் தலையீட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் சமூக நலத்துறை அலுவலர்கள் பரிதவித்து வருகின்றனர்.
பரமக்குடி தாலுகா அலுவலகத்தின் மூலம் பரமக்குடி நகர் மற்றும் ஒன்றியம், போகலூர், நயினார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள முதியோர் 10 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் நிர்வாக ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில் கணவன், மணைவி முதியோர் உதவித்தொகை வாங்கினால், யாராவது ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை நிறுத்தம் செய்வது என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான முதியோர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

ஆளும் கட்சியினரின் உத்தரவின்பேரில் பல குடும்பங்களில் அந்த நடைமுறை செயல்படுத்த வில்லை. திமுக ஆதரவு உள்ள குடும்பங்களில் உள்ளவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆளும் அதிமுக தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் சென்னதை போல், உதவித்தொகை 1,500 உயர்த்தபடும் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே முதியோர் உதவித்தொகை  நிறுத்தப்பட்டு உள்ளவர்கள் மற்றும் புதிதாக முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு புதிதாக விண்ணப்பங்களை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் வாக்கு சேகரித்தவர்கள் முதியோர் உதவித்தொகை உயர்வு மற்றும் உதவித்தொகை இல்லாதவர்களுக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக வாக்கு கொடுத்துள்ளனர். இதனால் பரமக்குடி நகர் பகுதிகளில் முன்னாள் கவுன்சிலர் வீடுகளிலும், கிராமங்களில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சிமன்ற தலைவர்களின் வீடுகளுக்கு முன்பு விண்ணப்பத்துடன் கையெழுத்து வாங்க காத்து கிடக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி தங்களுக்கு உதவித்தொகை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது சம்பந்தமாக முறையான விசாரணை செய்து உண்மையான பயனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்தாலும். ஆளும் கட்சியினர் தனக்கு வேண்டியவர்கள், உறவினர்கள் என தினமும் சிபாரிசு செய்தவாறு உள்ளனர். ஆளும் கட்சியினரின் தலையீடு அதிகமாக உள்ளதால். இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தாலுகா அலுவலகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்துள்ளனர். அதனுடன் முன்னாள் கவுன்சிலர், ஒன்றிய செயலாளர் என ஆளும் கட்சியினர் சிபாரிசு கடிதம் கொடுப்பதுடன், கட்டாயப்படுத்தும் விதமாக மிரட்டுகின்றனர். அதனால் சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை. மேலும் சட்டத்திற்கு புறம்பாக முதியோர் உதவித்தொகை வழங்க அனுமதி வழங்கவேண்டும் என ஆளும் கட்சியினர் கட்டாயப்படுத்துகின்றனர்’’ என்றார்.

Tags : crisis ,office ,Paramakudi Taluk ,party ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...