×

வடக்கு வலசை கிராமத்தில் மண் மாதிரி சேகரித்தல் விழிப்புணர்வு முகாம்

ராமநாதபுரம், மே 21:  ராமநாதபுரம் அருகே இரட்டையூரணி பஞ்சாயத்து வடக்கு வலசை கிராமத்தில் மண் மாதிரிகள் சேகரித்தல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சொர்ணமாணிக்கம் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குநர் வாசுபாபு, வேளாண்மை துணை இயக்குநர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக்அப்துல்லா முன்னிலை வகித்தனர். முகாமில் விவசாயிகள் சேகரித்த 50 மண் மாதிரிகளுக்கு பரமக்குடி வேளாண்மை அலுவலர் பிரமிளா மண் ஆய்வுகள் நடத்தினார். மண் ஆய்வில் உப்பின்நிலை, மண்ணின் கார அமில தன்மை, சுண்ணாம்புச் சத்து மற்றும் முதல் நிலை சத்துக்களான தழை, மணி சாம்பல் சத்துகள் இரண்டாம் நிலை சத்துக்களான கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டது.

மண் பரிசோதனை செய்வதால் அதன் தன்மைகேற்ற பரிந்துரை செய்யப்பட்ட உரங்களை இடலாம். இதனால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூலும் வருமானமும் பெறமுடியும். மண்வள அட்டையை பயன்படுத்தி சிபாரிசு செய்யப்பட்ட உரப் பரிந்துரையை இட்டு இருமடங்கு வருமானமும், மும்மடங்கு உற்பத்தியும் பெறலாம். முறையாக மண் பரிசோதனை செய்வதனால் உரச் செலவுகளை குறைக்கலாம் என தெரிவித்தனர். அனைத்து விவசாயிகளுக்கும் மண்வள அட்டைகளை வழங்கப்பட்டது. முகாமில் உச்சிப்புளி வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜன், துணை இயக்குனர்கள் கலைவாணி, பாண்டியன் கலந்து கொண்டனர். உதவி வேளாண்மை அலுவலர் முகமதுயூசுப் நன்றியுரை கூறினார்.

Tags : Soil Sampling Awareness Camp ,Northern Wallace Village ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை