×

பரமக்குடி-தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலைக்கு ஆய்வு பணிகள் துவக்கம்

பரமக்குடி, மே 21:   பரமக்குடி முதல் தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலைத் திட்ட ஆய்வு பணி மற்றும் முதற்கட்ட பணிகளை நெடுஞ்சாலை துறையினர் தொடங்கினார்கள். மதுரை முதல் பரமக்குடி வரையிலான 76 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலையாகவும், பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை உள்ள 39 கி.மீ. தூரம் இரண்டு வழிசாலையாக மாற்றுவதற்கு மத்திய தரைவழி போக்குவரத்து துறை சார்பாக ரூ.917 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. சிலைமான், மானாமதுரை, திருப்புவனம், கமுதக்குடி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு 95 சதவீத பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்து விட்டது.

இந்நிலையில் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான இருவழிச்சாலையை மாற்றி பரமக்குடி முதல் தனுஷ்கோடி வரையிலான நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகளாக பரமக்குடி முதல் தனுஷ்கோடி வரையிலான சாலைக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான 17 கிராமங்களில் 12 லட்சத்து 47 ஆயிரத்து 383 சதுர மீட்டர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. நான்கு வழிச்சாலைக்காக இருபுறங்களிலும் 60 மீட்டர் நிலங்கள் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் ஆவணங்கள் மற்றும் விசாரணை முகாம் மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிலங்களை அளிப்பவர்களின் அசல் ஆவணங்களை சரிபார்த்து பின்னர் மதிப்பு கணக்கீடு செய்யப்பட்டு நில உரிமையாளருக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுகுறித்து நில எடுப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘பரமக்குடி-தனுஷ்கோடி நான்கு வழிச்சாலைக்கு முதல் கட்டமாக பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை நிலம் எடுப்பு பணிகள் தொடங்கியுள்ளது. நிலம் எடுத்து இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்படும். நிலம் எடுப்பதில் நில உரிமையாளர்களுக்கு சந்தேகம் இருந்தால் வரும் 29ம் தேதி வரை பரமக்குடி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நில எடுப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்.

Tags : Paramakudi-Dhanushkodi ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை