×

திண்டுக்கல் மக்களவை, நிலக்கோட்டை சட்டசபை ஓட்டு எண்ணிக்கையில் 786 போலீசார் பாதுகாப்பு

திண்டுக்கல், மே 21: திண்டுக்கல் மக்களவை, நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவதற்கு 786 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் வினய் தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்கள் சந்திப்பில் கலெக்டர் கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையத்திற்கு மூன்று அடுக்க பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு படை, சிறப்பு போலீஸ் படை, லோக்கல் போலீசார் என 274 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் எண்ணிக்கையின் போது 6 டிஎஸ்பி.க்கள், 20 இன்ஸ்பெக்டர்கள், 73 எஸ்ஐ.க்கள், 313 போலீசார், 100 ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 786 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மக்களவை தொகுதியில் சட்டசபை வாரியாக 14 டேபிள்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 100 அலுவலர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் 3,968 தபால் ஓட்டுக்களும், 827 ராணுவத்தினரின் சர்வீஸ் ஓட்டுக்கள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த ஓட்டுக்கள் காலை 7 மணிக்கு ஒட்டும் எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். தபால் ஓட்டுக்கள் 8 மணிவரை பெறப்படும். அதற்கு பின்பு வரும் ஓட்டுக்கள் ஏற்று கொள்ளப்படாது. தபால் ஓட்டுக்கள் காலை 8 மணிக்கு எண்ண துவங்கும். பின்பு காலை 8.30 மணிக்கு ஓட்டுப்பதிவில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்படும். தபால் ஓட்டுக்கள் தனி அறையில் எண்ணப்படும். சுவிதா ஆப்: திண்டுக்கல் மக்களவை, நிலக்கோட்டை சட்டசபையில் பதிவான ஓட்டுக்கள் ஒவ்வொரு சுற்று விபரமும் சுவிதா ஆப்பில் பதிவு செய்யப்படும். ஓட்டு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கையை கண்காணிக்க மூன்று தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முகவர்களுக்கு கட்டுப்பாடு ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுக்கு 4 முகவர்களை நியமித்து கொள்ளலாம். ஓட்டு எண்ணிக்கையின் போது காலை 7 மணிக்குள் இருக்க வேண்டும். செல்போனை எக்காரணம் கொண்டு கொண்டு செல்லக்கூடாது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் கருவியில் பதிவான ஓட்டுக்களையும் எண்ண வேண்டியுள்ளதால், நள்ளிரவு வரைக்கும் கூட ஓட்டு எண்ணிக்கை நீடிக்கும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் யாருக்கு ஓட்டளித்தோம் என்ற கருவியில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, பின்பு மொத்தமாக முடிவுகள் அறிவிக்கப்படும். தனித்தனி பாதை: மக்களவை தொகுதியில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தனித்தனி, பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. முகவர்கள் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு செல்லக்கூடாது.  

பத்திரிகையாளருக்கு தனி அறை:
பத்திரிகையாளர்கள், டிவி செய்தியாளர்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எக்காரணத்தை கொண்டும் செல்போனுடன் ஓட்டு எண்ணும் அறைக்கு செல்லக்கூடாது. பத்திரிகையாளர் அறைக்கு அவ்வப்போது செய்திகள் பரிமாறப்படும். தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், முகவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உடன் டிஆர்ஓ வேலு, மாவட்ட எஸ்பி சக்திவேல் உட்பட பலர் இருந்தனர்.

பனையில் முளைக்கும் ஆலமரம்:
உலகிற்கே உணவு கொடுக்கும் உன்னத பணியை செய்து வரும் விவசாயிகளின் தற்போதைய நிலை மிகுந்த கவலை அளிக்கிறது. விளைநிலங்கள் எப்போது வீட்டு மனைகளாக மாறியதோ, அப்போதே விவசாயத்தின் அழிவு தொடங்கி விட்டது. விவசாயம் செய்வதே அரிதாகி வரும் நிலையில், தங்களது நிலத்தை காக்க போராட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வாங்கி விட்டு வெளிநாடுகளில் ஜாலியாக உலா வருகின்றனர். ஆனால், விவசாயத்துக்கு கொடுத்த கடனை கேட்டு வங்கிகள் கொடுத்த டார்ச்சரால், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதார போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. விவசாயம் செய்வதற்கே போராட்டம், வழக்குகளை சந்திக்க வேண்டிய சூழல் இருந்தால், வேளாண் துறையில் எப்படி முன்னேற்றம் வரும்? மக்களுக்கு தேவையான உணவுக்காகத்தான் விவசாயிகள் போராடுகின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் வேளாண் புரட்சிக்காக போராட வேண்டிய நிலைமாறி, தங்களது நிலத்தை காக்க போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, வறட்சியின் கோர தாண்டவமும் தலைவிரித்தாடுகிறது. கோடை வெப்பத்துக்கு பயிர்கள், தென்னை, பாக்கு மரங்கள் கருகி வருகின்றன. கூலி ஆட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். இதனாலே ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

விவசாயத்தை விட்டு விட்டு, மாற்றுத்தொழில் தேடி நகரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் உணவுக்காக நாம் பிறரிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். டிஜிட்டல் உலகத்தில் வாழ்வாதாரம் காக்கும் வேளாண் துறை மட்டும் வளராமல் இருக்க என்ன காரணம்? விவசாய உற்பத்தியை பெருக்கி வளம்மிக்க நாடாக மாற்ற பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது. விவசாயத்தை மேம்படுத்த பல புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும். அந்த திட்டங்கள் குக்கிராமங்கள் வரை சென்றடைய வேண்டும்.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை கண்டறிந்து, அதற்கு தகுந்தாற்போல் திட்டங்களை வகுக்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும் என்றால், முதலில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். அரசின் உதவிகள் அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி கிடைக்க வேண்டும். முக்கியமாக எளிதான வங்கிக்கடன் திட்டம் கண்டிப்பாக தேவை. நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயம் மிக முக்கியமானது என்பதால், விவசாயம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். தற்போது படித்த இளைஞர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களை ஊக்குவித்து விவசாயத்தை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

Tags : Dindigul Lok Sabha ,Nilkottai ,policemen ,
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு