×

ஒசூர் அருகே முகாமிட்டு குட்டிகளுடன் பயிர்களை நாசம் செய்யும் யானைகள்

ஓசூர், மே 21: ஓசூர் அருகே குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு, பயிர்களை நாசம் செய்து வருகிறது. அவற்றை வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக வனப்பகுதியில் இருந்து, குட்டிகளுடன் 20க்கும் மேற்பட்ட  யானைகள், ஓசூர் வனகோட்டத்திற்குள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நுழைந்தன. கடந்த சில நாட்களில் பல லட்சம் மதிப்பிலான பயிர்களை நாசம் செய்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சானமாவு, பீர்ஜேபள்ளி பகுதிகளில் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இந்நிலையில், கோபசந்திரம், ராமசந்திரம் பகுதியில் நேற்று தக்காளி, புதினா, ரோஜா, சம்மங்கி பூக்கள், பலாப்பழம், நெல், சோளம் உள்ளிட்ட விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் யானைகள் நாசம் செய்தன. நேற்று, பேரண்டப்பள்ளி பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்து, தொடர்ந்து அவற்றை கண்காணித்து வருகின்றனர். இந்த யானைகள்  பேரண்டப்பள்ளி, அம்பலட்டி, ராமசந்திரம், கதிரேப்பள்ளி பகுதிக்கு செல்லாதவாறு, 20க்கும் மேற்பட்ட வனக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். யானைக்கூட்டத்தை ஓசூர் வனப்பகுதியிலிருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

Tags : camps ,campus ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ