×

கிருஷ்ணகிரி தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் 308 அரசு ஊழியர் நியமனம்

கிருஷ்ணகிரி, மே 21: கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் பணிக்காக 308 அரசு ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் 1,757 போலீசாரும் ஈடுபட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.  கிருஷ்ணகிரி கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரபாகர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தல் முடிந்து வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு வாக்குகள் எண்ணப்படுகிறது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு என 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு, தலா ஒரு வாக்கு எண்ணிக்கை மையம், ஓசூர் இடைத்தேர்தலுக்கு ஒரு தனி வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தம் 7 வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் 14 மேசைகள் போடப்பட்டு தேர்தல் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகிறது.
இதற்காக ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும், 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க, இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை 26 சுற்றுகளாக நடக்கிறது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஊத்தங்கரை, பர்கூர் சட்டசபை தொகுதிக்கான வாக்குகள் 21 சுற்றுகளும், மற்றவை (கிருஷ்ணகிரி, தளி, வேப்பனஹள்ளி) 22 சுற்றுகளும் எண்ணப்பட உள்ளன. அது மட்டுமல்லாமல் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள், ராணுவ வீரர்களின் ஓட்டுகளை எண்ணுவதற்காக 9 மேசைகள் போடப்பட்டு எண்ணப்படவுள்ளது.  

பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு சுற்று முடிவுகளை தெரிவிக்க, தனி ஊடக மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மொத்தம் 3 நுழைவு வாயில்கள் உள்ளன. அதில் தொகுதி வாரியாக தனி அலுவலர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளே செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், 5 வாக்குச்சாவடிகளின் விவிபேட் இயந்திரங்களை கொண்டு வாக்குப்பதிவு சரிபார்க்கப்படும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதற்காக தேர்தல் பார்வையாளர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேர், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஓசூர் சட்டமன்ற தொகுதி மற்றும் ஓசூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒருவரும், வேப்பனஹள்ளி, தளி தொகுதி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒருவரும், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குகளை எண்ணும் பணியில் மொத்தம் 308 அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். அதைத் தவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வருதல், மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள 140 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 448 பேர் வாக்கு எண்ணும் பணியில் இருப்பார்கள்.

மேலும், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தவிர தமிழ்நாடு சிறப்பு போலீஸ் ஒரு கம்பெனியும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் இடத்தில் மட்டும் மாவட்ட எஸ்பி, ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பிக்கள், என மொத்தம் 658 போலீசார் பணியில் ஈடுபடுவார்கள். இதைத் தவிர மாவட்டம் முழுவதும், அன்றைய தினம் 1,099 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் மையம் மற்றும் மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் 1,757 போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் மருத்துவ குழு உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் உள்ள அனைத்து அலுவலர்களும் அன்றைய தினம் காலை 5 மணிக்கு பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார். அப்போது மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி, எஸ்ஐ சுல்தான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Government Employees ,constituency ,Krishnagiri ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,021...