×

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் இரவு பணிக்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி

பென்னாகரம், மே 21: பென்னாகரம் அரசு மருத்துவமனையில், இரவு பணிக்கு மருத்துவர்கள் வராததால், சிகிச்சைக்கு வருபவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இங்கு 13 மருத்துவர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், 2 பேர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு விட்டனர். நேற்று முன்தினம் இரவு, ஒகேனக்கல்லைச் சேர்ந்த விவசாயி சக்தி என்பவர், 3 வயது மகனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார். ஆனால், அங்கு இரவு நேர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் பணியில் இல்லை. நீண்ட நேரம் காத்திருந்தும், மருத்துவர் பாலாஜி பணிக்கு வரவில்லை. ஏமாற்றமடைந்த சக்தி, தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றார். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பென்னாகரம், நெருப்பூர், ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு 11 மருத்துவர்கள்இருந்தாலும், இரவு பணிக்கு யாரும் சரிவர பணிக்கு வருவதில்லை. இதனால், இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, இரவு பணிக்கு மருத்துவர்கள் தவறாமல் வருவதற்கு, மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : PENTHAKARAM ,GOVERNMENT ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...