×

தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்

தர்மபுரி, மே 21: தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில், நாளை மறுநாள் (23ம் தேதி) வாக்கு எண்ணிக்கை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த மாதம் 18ம் தேதி நடந்தது. திமுக சார்பில் டாக்டர் செந்தில்குமார், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வக்கீல் மணி, அதிமுக சார்பில் கோவிந்தசாமி, அமமுக சார்பில் ராஜேந்திரன் உள்பட 11 பேர் போட்டியிட்டனர்.

அதேபோல், அரூர் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், திமுக சார்பில் கிருஷ்ணகுமார், அதிமுக சார்பில் சம்பத்குமார், அமமுக சார்பில் ஆர்ஆர் முருகன் உள்ளிட்ட 9 பேர் போட்டியிட்டனர். 6,07,597 ஆண்களும், 5,86,807 பெண்களும், திருநங்கைகள் 39 பேர் என மொத்தம் 11,94,443 பேர் வாக்களித்தனர். 80.49 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்நிலையில், 8 வாக்குச்சாவடியில் கடந்த 19ம்தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது. இதில் 89.67 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. துணை ராணுவ படை, மாநில போலீசார், சிறப்பு படை ஆகிய மூன்றடுக்கு பாதுகாப்பு வாக்கு எண்ணும் மையத்திற்கு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (23ம் தேதி) காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கும். வாக்கு எண்ணும் அறையில் 14 மேஜை போடப்பட்டுள்ளது. இதுதவிர தபால் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மேஜையும், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு ஒரு மேஜை என மொத்தம் அதிகபட்சம் 16 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளது. ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோரது மேற்பார்வையில் வாக்குகள் எண்ணப்படும்.

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும், வேட்பாளர்களின் முகவர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அவர்களிடம் காட்டிய பின்னரே வாக்கு எண்ணும் பணியை தொடங்குவார்கள். அடுத்த 30 நிமிடங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரியவரும். மதியம் 1 மணி அளவில் மத்தியில் ஆட்சி அமைக்க போவது யார் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தலில், யாருக்கு ஓட்டுபோட்டோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் விவிபேட் என்கிற ஒப்புகை சீட்டு இயந்திரமும் பொருத்தப்பட்டிருந்தது. பதிவான வாக்குகளையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே, முடிவுகள் வெளியிடப்படும்.

இதனால் இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் 23ம் தேதி இரவுக்குள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தெரிந்து விடும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரியில் ஒரு எம்பி தொகுதி, 2 எம்எல்ஏ இடைத்தேர்தல் தொகுதி என மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 35 வேட்பாளர்களுக்கும் சேர்த்து, மொத்தம் 4480 முகவர்கள் வாக்கு எண்ணும் அறைகளில் இருப்பார்கள். தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்குள், மையத்தின் வெளிப்பகுதி மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் தடுப்புச்சுவர் சுற்றியும், குரும்பட்டி பஸ் ஸ்டாப் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்,’ என்றனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் 23 சுற்று வரை வாக்கு எண்ணிக்கைதர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் மேட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் அதிகபட்சம் 23 ரவுண்டுகள் வரை எண்ணப்பட உள்ளது.
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல், கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்தது. கடந்த 19ம் தேதி அய்யம்பட்டி, ஜாலிபுதூர், நத்தமேடு ஆகிய பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது. மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும், தர்மபுரி அருகே உள்ள செட்டிக்கரை பொறியியல் கல்லூரியில், 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தர்மபுரி நாடாளுமன்றத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பாலக்கோடு 19 சுற்றும், பென்னாகரம் 21 சுற்றும், தர்மபுரி 22 சுற்றும், பாப்பிரெட்டிப்பட்டி 23 சுற்றும், அரூர் 22 சுற்றும் மேட்டூர் 23 சுற்றுகளுமாக வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இது தவிர இடைத்தேர்தல் வாக்குகள் பாப்பிரெட்டிப்பட்டி 23 சுற்றும், அரூர் 22 சுற்றுமாக எண்ணப்பட உள்ளது. ஒவ்வொரு சுற்றும் எண்ணி முடிக்க, அரைமணி நேரம் ஆகும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (23ம் தேதி) காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8.30 மணிக்கு தொடங்கும்.

Tags : policemen ,security personnel ,Dharmapuri Government Engineering College ,
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு