×

மண்ணச்சநல்லூர் அருகே கூத்தூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் குப்பை கழிவால் வடிகால் வாய்க்கால் அடைப்பு பாலம் கட்டியும் மக்களுக்கு பயனில்லை

மண்ணச்சநல்லூர், மே 21:  மண்ணச்சநல்லூர் அருகே கூத்தூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளால் வடிகால் வாய்க்கால் அடைபட்டுள்ளதால் வாய்க்கால் மீது பாலம் கட்டியும்  பொதுமக்களுக்கு பயன் இல்லாமல் உள்ளது. மண்ணச்சநல்லூர் ஊராட்சியில்  அமைந்துள்ளது கூத்தூர் ஊராட்சி. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு  வசித்து வருகின்றனர். கூத்தூர் ஊராட்சியில் காமாட்சி அம்மன் கோயில் அருகே  குடித்தெருவில் உள்ள கழிவுநீர் வாய்க்காலின் மீது பொதுமக்களின்  பயன்பாட்டிற்காக பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 2016-17 நிதி ஆண்டில் உள்ளுர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எம்பி நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் இந்த பாலம்  அமைக்கப்பட்டது. பாலம் அமைக்கப்பட்ட புதிதில் இப்பகுதியில் கழிவுநீர்  வெளியேறி பொதுமக்களுக்கு பயன் அளிப்பதாக இருந்தது. உள்ளாட்சி  அமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பில்  இல்லாததால் வடிகால்  வாய்க்காலை யாரும் பராமரிக்கவில்லை. இப்பகுதி  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் இந்த பாலத்தின் அருகே உள்ள  வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை கொட்ட  ஆரம்பித்தனர். இதை  தடுக்கவோ, சுத்தம் செய்யவோ அதிகாரிகளுக்கு நேரம் இல்லை. இதனால் கழிவுநீர்  வாய்க்காலில் கழிவுகள் மற்றும் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளது. இதனால்  கழிவு நீர் முறையாக வெளியேறாமல் அப்படியே தேங்கி உள்ளது.

இதனால்  கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல், யானைக்கால் வியாதி மலேரியா உள்பட  பல்வேறு கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் இது  குறித்து விழிப்புணர்வு இல்லாமல் தொடர்ந்து அங்கு குப்பைகளை கொட்டி வருகின்றனர். அரசு அதிகாரிகளும் பொறுப்பின்றி அதை பராமரிக்காமல் உள்ளனர். எனவே மலைபோல் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு இங்கு  குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : panchayat ,Koothur ,Mannachanallur ,
× RELATED அரியனூர் ஊராட்சி பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் மின்சார கம்பம்