×

நிலத்தடி நீர் குறைந்ததால் கருமகாரியம் செய்ய மயான போர்வெல்லில் தண்ணீர் இல்லை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தா.பேட்டை, மே 21: முசிறி அருகே வடக்கு புதூர்பட்டியில் பொதுமயானத்திற்கு தண்ணீர் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி தாலுகா கோமங் கலம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு புதூர்பட்டி, தெற்கு புதூர்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி வரும் பொது மயானத்திற்கு போதிய தண்ணீர் வசதி இல்லாமல் பெரிதும் சிரமமடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கூறும்போது, வடக்கு புதூர்பட்டியில் பொது மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்திற்கு இறந்தவர்களை அடக்கம் செய்ய வரும்போது தண்ணீர் வசதிக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 500 அடி ஆழம் கொண்ட போர்வெல் மற்றும் மினிடேங்க் அமைக்கப்பட்டது. கருமகாரியங்களுக்கு வருவோர் மினிடேங்கில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி கொண்டனர். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு வருவோருக்கு மினிடேங்க் மிகுந்த உதவியாக இருந்தது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் போர்வெல் மோட்டாருக்கு தண்ணீர் எட்டவில்லை. இதனால் மினிடேங்க் பயன்பாடில்லாமல் உள்ளது. இறந்து போனவர்களை எரியூட்டவும், அடக்கம் செய்யவும், வரும் உறவினர்கள் டிராக்டரில் டேங்கர் தண்ணீர் பணம் கொடுத்து வாங்கி வந்து மினிடேங்கில்  ஊற்றி வைத்து பயன்படுத்துகின்றனர். எனவே நிலத்தடி நீர்மட்டத்திற்கு  ஏற்ப போர்வெல் மோட்டாருக்கு குழாய்களை இறக்கி பொது மயானத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த திருச்சி கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

Tags : gorge warehouse ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு