×

மணப்பாறை அருகே வனப்பகுதியில் வறட்சியால் தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகள் குடிநீர்தொட்டி அமைக்க கோரிக்கை

மணப்பாறை, மே 21:  மணப்பாறை அருகே உணவு, தண்ணீரின்றி மரணத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் குரங்குகளை பாதுகாக்க வனப்பகுதியில், தற்காலிகமாக தண்ணீர் தொட்டிகளை வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காவல்காரன்பட்டி உள்ள காயாம்பூ மலை, பொகஞ்சி மலை, கொசவன் மலை, திண்ணை மேடு மலை பகுதியில் அதிகளவிலான குரங்குகள் வாழ்ந்து வருகிறது. கருப்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட இம்மலைகளில் பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து வந்தாலும், தற்போது கடுமையான வறட்சி காரணமாக வனப்பகுதிக்குள் உள்ள குளங்களும் வறண்டு காணப்படுகிறது. வறண்டுபோன இந்த வனப்பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் கூட காண்பது அரிது. இப்படியான சூழலில் உணவும் தண்ணீரும் இல்லாமல் அவதிப்படும் குரங்குகள் அதிகளவில் இங்கு வசிப்பிடமாக கொண்டுள்ளன. தனது வாழ்வாதாரத்திற்காக வனப்பகுதியை விட்டு வெளியே வரும் குரங்குகள் விவசாய நிலங்களை தேடிச் செல்கின்றது. அப்படி செல்லும் குரங்குகளுக்கு தற்போதுள்ள வறட்சியால் விவசாய நிலங்களிலும், கிணறுகளிலும் உணவு, தண்ணீர் இல்லாதது அவைகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. பொதுவாக குரங்குகள் குடியிருப்பு பகுதிகள், கோவில்களில் அண்டிவாழும் சில குரங்குகள் ஓரளவிற்கு அவைகளுக்கு தேவையான உணவுகளை நிவர்த்தி செய்து கொள்கின்றன. ஆனால் வனப்பகுதியை இருப்பிடமாக கொண்ட இதுபோன்ற குரங்குகள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.

மரங்களில் உள்ள இலைகளும் உதிர்ந்து நிழலுக்குக்கூட ஓய்வெடுக்க வழியில்லாமல் வாழும் குரங்குகள், தான் ஈன்றெடுத்த குட்டிகளை காப்பாற்ற அவைகள் படும் அவதி காண்பவர்களை கண்கலங்கச்செய்கிறது. உணவும், தண்ணீரும் இல்லாமல் தவிக்கும் குரங்குகளை காப்பாற்ற வனப்பகுதிக்குள் ஆங்காங்கே  தொட்டிகள் அமைத்து தண்ணீரை நிரப்பி அதன் மூலம் குரங்குகளின் தாகத்தை தீர்ப்பது மட்டுமல்ல நாளுக்கு நாள் அழிந்துவரும் குரங்குகளை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரது குரலாக ஒலிக்கிறது.

Tags : forest ,downtown ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...