×

படிக்கவில்லை எனக்கூறி 5 வயது பெண் குழந்தையை அடித்து கொன்ற கொடூர தாய் தொட்டியம் அருகே சம்பவம்

தொட்டியம், மே 21:  5 வயது சிறுமி படிக்க வில்லை என கூறி அவரது தாய் அடித்ததில் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூரில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு வெளியூரைச் சேர்ந்த  பாண்டியன், அவரது மனைவி நித்ய கமலா ஆகியோர்  லத்திகா என்ற ஐந்து வயது  பெண் குழந்தையுடன் குடி வந்துள்ளனர். பாண்டியன் மோகனூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளார். இந்நிலையில் குழந்தை லத்திகாயை படுகாயத்துடன் அவரது பெற்றோர்கள் காட்டுப்புத்தூர் அரசு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். மேலும் மருத்துவர்கள் விசாரித்ததில் லத்திகாயை அவரது தாய் அடித்து உதைத்து படுகாயப்படுத்தியது தெரியவந்தது. குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்ததையடுத்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே  குழந்தை லத்திகா பரிதாபமாக இறந்து போனார். பெற்ற தாயே ஐந்து வயது குழந்தையை படிக்கவில்லை என்ற காரணத்திற்காக கொடூரமாக அடித்து காயப்படுத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த காட்டு புத்தூர் போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.

Tags : incident ,
× RELATED சீர்காழி அருகே குளம் ஏலம் எடுப்பதில்...