×

குடந்தை சாரங்கபாணி கோயிலுக்கு புதிய கொடிமரம் செய்வதற்காக 3 ஆண்டாக கிடக்கும் வேங்கை மரம் விரைந்து அமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்

கும்பகோணம், மே 21: கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு புதிய கொடிமரம் செய்வதற்காக 3 ஆண்டுகளுகாக மரம் அப்படியே கிடக்கிறது. எனவே விரைந்து கொடிமரம் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் உள்ளது. இது பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், 108 வைணவ தலங்களில் ரங்கம், திருப்பதிக்கு அடுத்து மூன்றாவது திருத்தலமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலின் கொடிமரம் 100 ஆண்டுகள் பழமையானதால் சேதமடைந்தது. இதையடுத்து அங்கு புதிய கொடிமரம் அமைப்பதற்கு அறநிலையத்துறையால் முடிவு செய்யப்பட்டது. கும்பகோணம் சாரங்கபாணி கோயிலுக்கு உபயதாரர் மூலம் 70 அடி உயரத்துக்கு புதிய கொடிமரம் மலேசியாவிலிருந்து 2017ம் ஆண்டு தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து கும்பகோணத்துக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. ரூ.25 லட்சம் மதிப்பிலான இந்த வேங்கை மரத்தை கொடிமரமாக தயார் செய்து 2017ம் ஆண்டு சித்திரை பெருவிழாவுக்குள் அமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

ஆனால் தலைமை ஸ்தபதி இல்லாததால் கொடிமரம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து புதிய கொடிமரம் அமைக்க வேண்டுமென கோயில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகளிடம் கேட்டபோது, பழைய கொடிமரம் சேதமடைந்துள்ளது. வெயில் கடுமையாக அடித்து வரும் நிலையில் கொடிமரத்தின் கீழ்பகுதி அரித்து காய்ந்தால் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கொடி மரம் அமைப்பதற்காக மரம் வாங்கப்பட்டு அங்கேயே கிடக்கிறது. இதுகுறித்து தெரிவித்தும் மேலதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றனர். அறநிலையத்துறையினரின் அலட்சியத்தால் கொடிமரம் மழை, வெயிலில் கிடந்து வருகிறது. எனவே கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் உள்ள பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மலேசியாவில் இருந்து வாங்கப்பட்ட மரம் வீணாகி விடும் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Pilgrims ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்