×

மின்சாரம் இல்லாமல் செயல்படும் வேலாடிப்பட்டி கால்நடை மருந்தகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தர்வகோட்டை, மே 21: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் அண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாடிப்பட்டியில் கால்நடை மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை சமீபத்தில் அடித்த கஜா புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை சரிசெய்யப்படாத நிலையில் இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கஜா புயல் சமயத்தில் கந்தர்வகோட்டை பகுதியில் பெரும்பான்மையான இடங்களில் மின்விநியோகம் தடை ஏற்பட்டது. பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மின்மாற்றிகள் காற்றில் பறந்தன. அச்சமயத்தில் வெளிமாவட்டம் மட்டுமின்றி வெளிமாநிலத்திலிருந்து மின்ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் வேலாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை இன்று வரை சரிசெய்யப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களுக்கு வேதனை தரும் செயலாக உள்ளது. சில கால்நடை மருந்துகளை குளிர்சாதன வசதியில் வைக்கப்பட வேண்டும். ஆனால் மின்சாரம் இல்லாமல் அவற்றை சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தேவையான மருந்துகள் கந்தர்வகோட்டையிலிருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு வேண்டிய மருந்துகள் கிடைக்காத நிலை உள்ளது.

மேலும் இக்கட்டிடம் பொதுபணித்துறையின் கீழ் இயங்குகிறது. எனவே தான் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்றும், பொதுப்பணித்துறை சென்னை தலைமை அலுவலகத்திற்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே உடனடியாக மின்சாரம் வசதி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Citizens ,
× RELATED மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 26,875 பேர் தபால் வாக்களிக்க ஏற்பாடு