×

அரணாரை மரப்பட்டறை அருகே கொள்ளிடத்திலிருந்து வரும் குழாயில் கசிவு துறையூர் சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்

பெரம்பலூர், மே 21: பெரம்பலூர் அரணாரை அருகே நகராட்சிக்கு கொள்ளிடத்திலிருந்து வரும் குடிநீர் குழாயில் கசிவு காரணமாக உடைப்பெடுத்து துறையூர் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனாலர் 10 மணி நேரத்திற்கு குடிநீர் வரத்து தடைபட்டது.பெரம்பலூர் நகராட்சி 2ம் நிலை அந்தஸ்து கொண்ட நகராட்சியாகும். இந்த நகராட்சியில் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரம்பலூர் நகராட்சியின் குடிநீர் விநியோகத்திற்கென எளம்பலூர் உப்போடை, செங்குணம் பிரிவு ரோடு, துறைமங்கலம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடிநீர் கிணறுகள் உள்ளன.இவற்றில் இருந்து போதுமான குடிநீரை பெற முடியாத காரணத்தால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டுவர திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதற்காக திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா தண்டாங்கோரை அருகே கொள்ளிடம் ஆற்றில் ராட்சத குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் நீருந்து நிலையங்கள் வழியாக உந்தப்பட்டு தாளக்குடி, பெரகம்பி, செட்டிக்குளம், தம்பிரான்பட்டி, ரங்கநாதபுரம், செஞ்சேரி வழியாக பெரம்பலூர் நகராட்சிக்கும், குரும்பலூர் பேரூராட்சிக்கும் குழாய்களில் குடிநீர் கொண்டு வரப்பட்டு மக்களின் குடிநீர் தேவை ஓரளவுக்கு நிவர்த்தி செய்யப்பட்டது. இந்நிலையில் அடிக்கடி சாலை விரிவாக்கம், கேபிள்கள் பதித்தல், சாலையோரங்களில் கனரக வாகனங்கள் இறங்கி செல்வதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக சாலையோரங்களில் பதிக்கப்பட்ட குழாய்களில் கசிவு ஏற்படுதல், உடைப்பு ஏற்படுதல் அவ்வப்போது நடந்து வருகிறது.
இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் 2ம் கட்டமாக ஏற்கனவே உள்ள சிறிய குழாய்களுக்கு மாற்றாக சற்று பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டன. இருந்தும் சாலையோரங்களில் செல்கிற கனரக வாகனங்களால் ஏற்படும் அழுத்தம் காரணமாக குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்பட்டு அதுவே குழாய் உடைபட காரணமாகவும் ஆகி விடுகிறது.

இந்நிலையில் பெரம்பலூர்- துறையூர் சாலையில் நேற்று காலை அரணாரை மரப்பட்டறை அருகே சாலையின் தென்புறம் தரையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி தார் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரம்பலூர் நகராட்சி அதிகாரிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு அலுவலர்களிடம் தெரிவித்து குடிநீர் குழாய்கள் சரி செய்யும் பணிகள் நடந்துவருகிறது. இதற்காக குழாய்களில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு பிறகு குழாய் அடைப்பு சரி செய்யும் பணிகள் நடக்கிறது. காலையில் இருந்து நேற்றிரவு வரை பணிகள் நடந்ததால் குடிநீர் விநியோகம் 10 மணி நேரத்துக்கு தடைபட்டது. இன்று குழாயிலுள்ள மண் கசிவுகள் அகற்றப்பட்டு குடிநீர் சுத்தப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...