×

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

கரூர், மே21: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளதால் போலீசார் நிம்மதியடைந்துள்ளனர். கடந்த 20 நாட்களாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. நான்கு தொகுதிகளில் அதிகளவு பரபரப்புகளை கொண்ட தொகுதியாக அரவக்குறிச்சி விளங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
3 நாட்கள் திமுக தலைவர் ஸ்டாலின், இரண்டு முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அரவக்குறிச்சி தொகுதி முழுதும் பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன், பிரச்னைக்குரிய வகையில் பேசியதால், பிரதமர் மோடியே பதில் அளிக்கும் வகையில்  அந்த வார்த்தை அமைந்து விட்டது. இதனையடுத்து, பல்வேறு அமைப்புகள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதோடு, வழக்கும் பதிந்தனர். இதனால், இரண்டாவது முறை மே 16ம்தேதி அன்று வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள வந்த கமலுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த அனைத்து பிரசார களங்களிலும் போலீசார் தான் பாதுகாப்பு பணியை மேற்கொண்டதால், அனைத்து நாட்களும் போலீசார் மத்தியில் ஒரு வித பதட்டமான சூழ்நிலையில்தான் அனைவரும் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், வாக்குப்பதிவின் போது, பல இடங்களில் வாக்குவாதம், தகராறு போன்றவை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியின் வாக்குப்பதிவு ஒரு சில பகுதிகளை தவிர அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதனால், கடந்த 20 நாட்களாக பாதுகாப்பு பணியை மேற்கொண்ட அனைத்து  போலீசாரும் நிம்மதியடைந்துள்ளனர். மே 23ம்தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.


Tags : Aavakurichi ,
× RELATED அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில்...