×

இலவச சைக்கிளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காரைக்கால், மே 21: காரைக்கால் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க தலைவர் வின்சென்ட், செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. மாவட்டத்தின் அனைத்து பகுதிக்கும் அரசின் ஒரு ரூபாய் பேருந்து இயங்கவில்லை. இந்நிலையில் இலவச சைக்கிள் இருந்தால் மாணவர்களுக்கு பலவகையில் நன்மை பயக்கும். இந்த இலவச சைக்கிள் பல இடங்களில் இருப்பில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவை அப்படியே இருந்தால் அனைத்தும் துருபிடித்து வீணாகும் நிலை உருவாகும். இதை விடுவிக்கவும், புதிதாக சைக்கிள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.

 அதேபோல், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை காலத்தோடு வழங்க நடவடிக்கை செய்ய வேண்டும். மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் அமைச்சக ஊழியர்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கவுன்சலிங் முறையில் பணியிட மாற்றம் செய்யப்படுவதுபோல ஆசிரியர்களுக்கும் பணியிட மாற்றம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பள்ளிகள் அருகே போதை பொருள்கள் விற்பனை செய்யும் மையங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதுபோன்ற  இடங்களை மாவட்ட காவல்துறை ஆய்வு செய்து உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 திருவேட்டைக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கல்வி சுற்றுலா அனுப்பவும், பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், பள்ளி முன் பெற்றோர் மற்றும் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...