×

கோயில் திருவிழா சமாதான கூட்டம்

வேப்பூர், மே 21: வேப்பூர் அடுத்த பாசார் கிராம மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடப்பது வழக்கம். அதே கிராமத்தை சேர்ந்த மருதமுத்து (60) மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆண்டுகளாக திருவிழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடப்பாண்டு திருவிழா நடத்துவதற்கான பொதுக்கூட்டத்தில் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடைபெற்றது. இதுகுறித்து மருதமுத்து வேப்பூர் போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மனமுடைந்த மருதமுத்து நேற்று முன் தினம் திட்டக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் தனது குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவர்களை டிஎஸ்பி குணசேகரன் சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

இதைத்தொடர்ந்து திட்டக்குடி சமூகநல தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வேப்பூர் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் சமாதானக் கூட்டம் வேப்பூர் காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாசார் கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதில் மருதமுத்துவுக்கு பதிலாக அதே கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்பவரை நியமித்து திருவிழாவை நடத்துவது, அனைவரிடமும் முறையாக குடும்ப வரியை பெற்று சம மரியாதை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

Tags : Temple Festival Peace Meeting ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு