×

சம்பளம் வழங்காததை கண்டித்து விருத்தாசலம் சார்ஆட்சியர் அலுவலகம் திடீர் முற்றுகை

விருத்தாசலம், மே 21: சம்பளம் வழங்காததை கண்டித்து விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை நூறுநாள் வேலை திட்ட பயனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு வேலை செய்து வந்த பயனாளிகளுக்கு கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வந்தது. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை கேட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும் இதுகுறித்து விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஐந்து மாதங்களாக மனு கொடுத்தும் இதுநாள் வரை சம்பளம் வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் நேற்று விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சார் ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக மனு அளிக்குமாறு கூறினார்.

இதையடுத்து அவர்கள் சார் ஆட்சியர் பிரசாந்த்திடம் மனு அளித்தனர். அதில் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்தும் ஐந்து மாத சம்பளம் எங்களுக்கு இன்னும் ஊராட்சி நிர்வாகம் தரவில்லை. இதனால் எங்களின் அன்றாட வாழ்வாதார தேவைகளை வாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் அலட்சியமான பதிலை கூறுகின்றனர். மேலும் பிள்ளைகளின் படிப்பிற்கு செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். அதனால் எங்கள் மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து விரைவில் எங்கள் சம்பளத்தை வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். மேலும் விரைவில் சம்பளம் வழங்கவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என கூறி மனு அளித்து விட்டுசென்றனர். இச்சம்பவத்தால் சார் ஆட்சியர் அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Sudden Siege ,Virudhachalam Suriyar Office ,
× RELATED ஏலச்சீட்டு நடத்தி மோசடி சப்-கலெக்டர்...