×

ஆரணி அருகே 7 மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் பிடிஓ சமரசம்

ஆரணி, மே 21: ஆரணி அருகே 7 மாதங்களாக முறையான குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தேரி ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அதே பகுதியில் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கடந்த 7 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து, ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிடிஓவிடமும், ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம்.  இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த வாரம் பிடிஓ அலுவலகத்திற்கு சென்று சித்தேரி ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என பிடிஓ குப்புசாமியிடன் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறு அமைப்பதாக பிடிஓ உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதைதொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சித்தேரி பகுதியில் உள்ள சக்தி நகரில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் புதிதாக அமைத்த ஆழ்துளை கிணற்றில் குடிநீர் விநியோகம் செய்ய மின்மோட்டார், பைப் லைன் அமைக்க வில்லையாம். இதனால், அப்பகுதி மக்கள் தினமும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தும் பயனில்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆழ்துளை கிணறை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கூறி நேற்று ஆரணி- சேத்துப்பட்டு சாலையில் திடீரென மறியில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வாரத்தை நடத்தினர்.

இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் ஆழ்துளை கிணறை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த பிடிஓ குப்புசாமி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களுக்குள் ஆழ்துளை கிணறு பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தார். இதை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Arani ,
× RELATED 150 கிலோ மிளகாய் கொண்டு மகா...