×

அடிப்படை வசதிகள் இல்லாத காஞ்சிபுரம் ரயில் நிலையம்

காஞ்சிபுரம், மே 21: கோயில்களின் நகரமான காஞ்சிபுரம் வரும் ரயில் பயணிகளுக்கு குடிதண்ணீர் கூட இல்லை என்று ரயில்வே பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம் கிழக்கு, புதிய ரயில் நிலையம் என இரண்டு ரயில் நிலையங்கள் இருக்கின்றன. கிழக்கு ரயில் நிலையம் எனப்படும் பழைய ரயில் நிலையத்தில் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாததால் ரயில் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், திருப்பதி போன்ற பகுதிகளுக்கும், செங்கல்பட்டு, சென்னை போன்ற பகுதிகளுக்கும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள்  சென்று வருகின்றனர். காஞ்சிபுரம், சென்னைக்கு அருகாமையில் உள்ள நகரம் ஆதலால் இங்கிருந்து தலைமைச் செயலகத்திற்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள், மறைமலைநகர் , கூடுவாஞ்சேரி, தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.  

 மேலும் கோயில் நகரம் என்பதால் அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து ஏராளமான பயணிகள் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். இதனால் காலையில் சென்னை செல்லும் ரயிலிலும், மாலையில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் திரும்பும் ரயிலிலும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சென்னை கடற்கரையில் இருந்து சுற்று வட்டப் பாதை ரயிலும் காஞ்சிபுரம் வழியாக விடப்பட்டுள்ளது. இந்த ரயில் மூலம் காஞ்சிபுரத்தில் இருந்து திருவள்ளூர், ஆவடி போன்ற பகுதிகளுக்கு எளிதில் பயணிகள் சென்று வர முடிகிறது. இவ்வாறு காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்படாமலேயே உள்ளது.

 இந்த ரயில் நிலையத்தின் மேற்கூரை கூட முழுமையாகப் போடப்படாமல் ஒரு பகுதி மட்டுமே போடப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களிலும், கோடை காலங்களிலும் ரயிலுக்கு வரும் பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி இல்லாததால் ரயில் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இது குறித்து ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் கேட்டபோது ரயில் நிலைய பிளாட் பார்முக்கு மேற்கூரை இல்லாததால் தற்போது கடுமையான வெயிலை சமாளிக்க முடியவில்லை. எனவே ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும். மேலும் அவசரத் தேவைக்கு குடிதண்ணீர் கூட இல்லை. தண்ணீர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்றனர்.

Tags : Kanchipuram Railway Station ,facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...