×

சித்தாமூர் ஊராட்சியில் பிஎஸ்என்எல் இைணயதள சேவை முடங்கியது

செய்யூர், மே 21: சித்தாமூர் ஊராட்சியில் உள்ள, பிஎஸ்என்எல் இணைய தள சேவைகள் சரியாக கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்டது சித்தாமூர். 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மையப்பகுதியில், சித்தாமூர் அமைந்துள்ளது. இங்கு, வட்டார வளர்ச்சி அலுவலகம், காவல் நிலையம், பள்ளி, வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு தனியார் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அமைந்துள்ளது.இப்பகுதியில், ஐநூறுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். இணைய தள சேவை பெற்றுள்ளனர். இதனால், சித்தாமூர் சுற்றியுள்ள கிராம மக்கள் ஆன்லைன் மூலம் பத்திர பதிவு மற்றும் அரசு வழங்கும் பல்வேறு நிதியுதவிகளை பெறுவதற்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு வந்து செல்கின்றனர்.

மேலும், இணைய தளம் மூலம் பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு படிக்கவும், கல்லூரி மாணவர்கள்  இணைய தளம் மூலம் பல்வேறு தேர்வுகள் எழுதவும், பதிவு செய்யவும், வேலை வாய்ப்புக்கு  விண்ணப்பிப்பதற்காக சித்தாமூர் வந்து செல்கின்றனர். ஆனால், இப்பகுதியில் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் இணைய தள சேவை சரியாக கிடைப்பதில்லை . இதனால், இணைய தள தேவைகளுக்காக வரும் பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து இதே பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். கிளை அலுவலகத்திலும், மேல்மருவத்தூரில் உள்ள பொறியாளர் அலுவலகத்திலும் பலமுறை வாடிக்கையாளர்கள் புகார்கள் அளித்தும் இணைய தள சேவையை  சரி செய்வதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கூறுகையில், ‘‘பல்வேறு அரசு சார்ந்த பணிகளும், கல்லூரி சார்ந்த தேர்வுகளும் அனைத்தும் இணையதள சேவை மயமாக்கப்பட்டதால், பொது மக்கள் அனைத்து தேவைகளுக்கும் இணையதளத்தை நாடவேண்டியுள்ளது.ஆனால், அரசு வழங்கும் பி.எஸ்.என்.எல். இணைய சேவை சரியாக கிடைக்காததால்  எங்களால் எந்தவொரு பணியையும் தொடர முடிவதில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தால்  சரி செய்ய பணியாளர்கள் இல்லை என பல்வேறு காரணங்களை கூறி மழுப்புகின்றனர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை என்றால் மட்டும் அங்குள்ள பணியாளர்கள் கொடி பிடித்துக்கொண்டு போராட்டங்கள் நடத்த வந்து விடுகின்றனர். இணையதள சேவைக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவலம் உள்ளது.
இதனால், வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே, இணைதள சேவை சரியாக கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : BSNL ,Sitamuroor ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...