×

அண்ணா பட்டு கூட்டுறவு சங்க திமுக இயக்குநரை தாக்கிய அதிமுக இயக்குநர்

காஞ்சிபுரம், மே 21: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க திமுக இயக்குநரை தாக்கிய அதிமுக இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தலைவர் பொறுப்பு வகித்த செல்வராஜ் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் துணைத்தலைவர் விஜயா மதிவாணன் பொறுப்பு தலைவராக உள்ளார். அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக திமுக சார்பில் இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லோகநாதன் என்பவர் கைத்தறித்துறை துணை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று தலைவர் பொறுப்பு வகிக்கும் துணைத்தலைவர் விஜயா மதிவாணனிடம் விவரம் கேட்டுள்ளார். லோகநாதன் பேசிக் கொண்டிருக்கும்போதே, உள்ளே நுழைந்த அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவரும், தற்போதைய இயக்குநருமான விஸ்வநாதன் லோகநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற இயக்குநர்கள் லோகநாதனை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் லோகநாதனின் அப்பா ராமசாமி விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில், அண்ணா பட்டு கூட்டுறவு சங்க இயக்குநரான என் மகன் லோகநாதனை, அதிமுக இயக்குநரான விஸ்வநாதன் முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் பலமாகத் தாக்கி அலுவலகத்திற்கு வெளியே தள்ளியுள்ளார். தன் புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து கேட்டதற்கு கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். எனவே, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். அதேநேரத்தில் அதிமுக சார்பில் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவரும், தற்போதைய இயக்குநருமான விஸ்வநாதனும், தலைவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து லோகநாதன் தகாத வார்த்தைகளால் பேசினார். தட்டிக்கேட்கச் சென்ற என்னை லோகநாதன் தாக்கினார் என்று விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் முறைகேடு புகாரில் சிக்கித்தவிக்கும் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் மேலும் பிரச்சினை அதிகரித்துள்ளது.

Tags : AIADMK ,DMK ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...