×

அம்மன் கோயில்களில் தீ மிதி திருவிழா கோலாகலம்

திருவள்ளூர், மே 21: திருவள்ளூர் அடுத்த நாராயணபுரம் செல்லியம்மன் அம்மன் கோயில் 17ம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
விழாவுக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் கே.வி.எஸ்.குபேரன் தலைமை வகித்தார். விழாவையொட்டி அம்மனுக்கு கடந்த 10ம் தேதி மகா அபிஷேகமும், காப்பு கட்டுதலும் நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் அம்மன் கரகம் வீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு கிராம பெண்கள் ஒன்றுகூடி, கோயில் முன்பு பொங்கலிட்டும், அம்மனுக்கு படையலிட்டும் வழிபட்டனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

இரவு 8 மணிக்கு உற்சவர் செல்லியம்மன் வாணவேடிக்கை முழங்க திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து தெருக்கூத்து நடைபெற்றது. இதில், அறங்காவலர் பி.எஸ்.முனிரத்தின நாயுடு உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர். ஊத்துக் கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மேல்சிட்ரபாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில்  தீ மிதி திருவிழா கடந்த 10ம் தேதி ஆஞ்சநேயர் சுவாமி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15ம் தேதி அங்காளம்மன் சுவாமி கொடி ஏற்றுதல், பொங்கல் வைத்தல், கரக ஊர்வலமும் நடந்தது. 16ம் தேதி கஞ்சி ஊற்றுதல், 17ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாணம், 18ம் தேதி அலகு நிறுத்துதல் நடைபெற்றது.

 நேற்று முன்தினம் மாலை தீ மிதி திருவிழா நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. காப்பு கட்டிய மஞ்சள் ஆடை அணிந்த 250 பக்தர்கள், பொன்னியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கினர். விழாவில், கிராம பெரியவர்கள் ஷேக்தாவுத், கோ.சீனிவாசன், சக்திவேல், ஆறுமுகம், பழனி, புஷ்பா சீனிவாசன் மற்றும் பாமக மாநில துணைப்பொதுச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட நிர்வாகி பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி நாகராஜ் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : fire maiden festivals ,temples ,Amman ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு