×

புது கும்மிடிப்பூண்டியில் கிடப்பில் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் அவதி

கும்மிடிப்பூண்டி, மே 21: கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒட்டி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கடந்த வருடம் தொடங்கப்பட்ட மேம்பாலப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, ஆத்துப்பாக்கம், புதுகும்மிடிப்பூண்டி, வழுதலம்பேடு, குருவிஅகரம் தண்டலச்சேரி, கெட்டனமல்லி, அயநெல்லூர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்கள் தினமும் கும்மிடிப்பூண்டி பஜார், சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்வதற்காக கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையை கடக்க வேண்டி உள்ளது. வாகன போக்குவரத்து மிகுந்த இச்சாலையை கடந்து செல்ல முயற்சிக்கும்போது வாகனங்கள் மோதி பாதசாரிகள் விபத்துக்குள் சிக்கினர். சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில்  மேம்பாலம் கட்ட வலியுறுத்தி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது.

இந்த நிலையில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, தச்சூர் கூட்டுசாலையில் இருந்து எளாவூர் வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அத்தோடு கும்மிடிப்பூண்டி பைபாசில் மேம்பாலம் பணியும் தொடங்கப்பட்டது. தற்போது மேம்பாலப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால்  அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.  கும்மிடிப்பூண்டி பஜாரிலிருந்து புதுகும்மிடிப்பூண்டி, சிப்காட் பகுதிக்கு செல்லும்  கிராம மக்கள் சாலை விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இருபுறமும் சாலையை கடக்கும்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.  எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பால பணியை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : lighthouse ,
× RELATED கரூர் அமராவதி மேம்பாலத்தில் அசுர...